அரசுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்கு தயார்

சபையில் இராதாகிருஷ்ணன் MP உரை

மலையக மக்கள் தொடர்பில் பாகுபாடற்ற விதத்தில் அரசு செயற்படுமானால் அரசாங்கத்தின் செயற்பாடுகளு க்கு நாம் பூரண ஆதரவு வழங்கத் தயார் என ஐக்கிய மக்கள் சக்தி எம்பி, வே.இராதாகிருஷ்ணன் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

நுவரெலியா மாவட்டத்திற்கு 05 புதிய பிரதேச செயலகங்கள் கடந்த அரசாங்கத்தினால் அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையிலும் இதுவரை அது வழங்கப்படவில்லை. அதற்கான நடவடிக்கைகள் இழுத்தடிக்கப்பட்டு வருகின்றன.

அதேவேளை,யுனிக் அடையாள அட்டைகளை வழங்குவதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில் பெருமளவு மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் கூட இல்லாத நிலை காணப்படுகிறது.

அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு அவர்களுக்கு வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சபையில் கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சபையில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

நாட்டில் ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடுகையில் மலையக மக்கள் பெரும் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர். பெரும்பாலான தோட்டத் தொழிலாளர்களுக்கு தேசிய அடையாள அட்டை, பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் இல்லாத நிலை காணப்படுகின்றது. ஊழியர் சேமலாப நிதியை பெற்றுக் கொள்வதற்கு தேவையான ஆவணங்களைப் பெற்றுக் கொள்வதற்கும் அவர்களால் முடியாமல் உள்ளது. அதற்கான வாய்ப்புகளை அரசாங்கம் பெற்றுக் கொடுக்க வேண்டும்.

அதேவேளை 2019ம் ஆண்டு பாராளுமன்றத்தில் அனுமதிக்கப்பட்​ட

நுவரெலியா மாவட்டத்திற்கான 5 பிரதேச செயலகப் பிரிவுகள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. அப்போது பாராளுமன்றத்தின் அனுமதி வழங்கப்பட்ட காலி மாவட்டத்திற்கான மூன்று பிரதேச செயலகங்கள் வழங்கப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் ஏழு இலட்சம் மக்கள் வாழும் நிலையில் ஐந்து பிரதேச செயலகங்களே உள்ளன. 14 ஆயிரம் பேருக்கு ஒரு கிராம சேவகர் உள்ள கிராம சேவை உத்தியோகத்தர் பிரிவும் அங்கு காணப்படுகிறது.

எமது மக்களின் உரிமைகள் வழங்கப்படவேண்டும். பாரபட்சமற்ற விதத்தில் அரசாங்கம் செயற்பட்டால் நாம் அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு ஆதரவு வழங்கத்தயார் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Thu, 03/10/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை