உக்ரைன் பதற்றம்: பாதுகாப்பு சபையில் ரஷ்யா - அமெரிக்கா கடும் வாக்குவாதம்

உக்ரைனுடனான எல்லை பகுதியில் ரஷ்யா துருப்புகளை குவித்திருப்பது குறித்து அமெரிக்கா பேச்சுவார்த்தை ஒன்றுக்கு அழைப்பு விடுத்ததை அடுத்து அமெரிக்க மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளுக்கு இடையே பாதுகாப்புச் சபையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த படைக் குவிப்பு பல தசாப்தங்களில் காணாத அளவுக்கு ஐரோப்பாவில் மிகப்பெரியதாக உள்ளது என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் லின்டா தோமஸ் கிரீன்பீல்ட் தெரிவித்துள்ளார்.

மறுபுறம் அமெரிக்கா ஆத்திரத்தை தூண்டுவதாகவும் ரஷ்ய விவகாரத்தில் அது ஏற்றுக்கொள்ள முடியாத தலையீட்டை மேற்கொள்வதாகவும் ரஷ்ய தூதுவர் சாடினார்.

உக்ரைன் மீது ரஷ்யா ஆக்கிரமிப்புத் தொடுத்தால் ரஷ்யாவுக்கு எதிராக மேலும் தடைகளை விதிப்பதாக அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உறுதி அளித்தன.

தற்போது சாத்தியமானதை விடவும் ரஷ்யாவுக்கு நெருக்கமான தனிநபர்கள் மற்றும் வர்த்தகங்களை பரந்த அளவில் இலக்கு வைத்த சட்டமூலம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் லீஸ் ட்ரஸ் குறிப்பிட்டுள்ளார்.

ரஷ்யாவுடன் நெருக்கமானவர்களை சர்வதேச நிதி அமைப்பில் இருந்து துண்டிப்பதாக அமெரிக்காவின் தடை அமையும் என அமெரிக்க அதிகாரி ஒருவர் எச்சரித்துள்ளார்.

உக்ரைன் எல்லைகளுக்கு அருகில் ரஷ்யா 100,000 துருப்புகள், பீரங்கிகள் மற்றும் ஏவுகணைகளை நிலைநிறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.

மறுபுறம் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் அன்டனி பிளின்கள் மற்றும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செய்கெய் லவ்ரோவுக்கு இடையே நேற்று சந்திப்பு ஒன்று இடம்பெற்ற நிலையில் இந்த பதற்ற சூழலை தணிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன.

இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்ற பாதுகாப்புச் சபை கூட்டத்தில், உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா இராணுவ நடவடிக்ைக மேற்கொள்வது பற்றி எந்த ஆதாரமும் இல்லை என்றும் தமது துருப்புகள் குவிப்பது பற்றி ஐ.நாவினால் உறுதி செய்யப்படவில்லை என்றும் ரஷ்ய தூதுவர் வசிலி நெபன்சியா தெரிவித்துள்ளார்.

ரஷ்யா தனது சொந்த நிலத்தில் துருப்புகளை நிறுத்துவதாகவும் இது அமெரிக்காவின் பிரச்சினையல்ல என்றும் அவர் மேலும் கூறினார்.

ஐ.நாவில் திறந்த அமர்வு ஒன்றை நடத்துவதை தடுப்பதற்கு ரஷ்யா முயன்றபோதும் இது தொடர்பிலான வாக்கெடுப்பில் இரண்டுக்கு 10 வாக்குகளால் ஆதரவு கிடைத்தது.

பைடன் நிர்வாகம் பதற்றம் மற்றும் விவாதத்தை ஏற்படுத்தி மோதலை தூண்டுகிறது என்று நெபன்சியா கூறினார்.

“எமது நாட்டின் உள் விவகாரங்களில் ஏற்க முடியாத தலையீடாக இது உள்ளது. அதேபோன்று, பிராந்தியத்தின் உண்மையான நிலைமை பற்றி சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்தும் முயற்சியாக இது இருப்பதோடு தற்போதைய சர்வதேச பதற்றத்திற்கு காரணமாகவும் இது உள்ளது” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு இராஜதந்திர தீர்வு ஒன்று இருப்பதாக அமெரிக்கா தொடர்ந்து நம்புவதாக கூறிய தோமஸ் கிரீன்பீல்ட், ரஷ்யா உக்ரைன் மீது ஆக்கிரமிப்பு தொடுத்தால் அமெரிக்கா தீர்க்கமாக செயற்படும் என்றும் அது பயங்கர விளைவுகளை ஏற்படுத்தும் என்று எச்சரித்தார்.

“ஐரோப்பாவில் கடந்த பல தசாப்தங்களில் இடம்பெற்ற மிகப்பெரிய படை குவிப்பாக இது உள்ளது. நாம் இப்போது பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் கூட ரஷ்யா அவர்களுடன் இணைய மேலும் படைகள் மற்றும் ஆயுதங்களை அனுப்பி வருகிறது” என்று அவர் பாதுகாப்புச் சபையில் கூறினார்.

உக்ரைனின் வடக்கு எல்லையில் உள்ள அண்டை நாடான பெலாரஸில் தனது படைகளை 30,000 ஆக அதிகரிக்கவும் ரஷ்யா திட்டமிட்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

ரஷ்யாவின் அசாதாரண படை குவிப்பு தொடர்பான கவலையை காரணமாகக் கூறி பெலாரஸில் உள்ள அமெரிக்க அரச பணியாளர்களின் குடும்பத்தினரை வெளியேறும்படி அமெரிக்கா கடந்த திங்களன்று உத்தரவிட்டது. இதற்கு முன்னர் இதேபோன்ற உத்தரவு உக்ரைனில் இருக்கும் அமெரிக்க தூதரக பணியாளர்களின் குடும்பத்தினருக்கும் விடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் நேட்டோ கூட்டணியில் ஒருபோதும் இணையாது என்ற உத்தரவாதத்தை ரஷ்யா மேற்குலகத்திடம் இருந்து கோருகிறது. எனினும் அமெரிக்கா இந்தக் கோரிக்கையை நிராகரித்தது.

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் உட்பட 30 அங்கத்துவ நாடுகளைக் கொண்ட நேட்டோ அமைப்பில், ரஷ்ய எல்லையில் இருக்கும் முன்னாள் சோவியட் குடியரசுகளான லிதுவேனியா, லத்வியா மற்றும் எஸ்தோனியா நாடுகளும் இடம்பெற்றுள்ளன. கிழக்கு ஐரோப்பாவில் உள்ள நேட்டோ துருப்புகள் தமது பாதுகாப்புக்கு நேரடி அச்சுறுத்தலாக இருப்பதாக ரஷ்யா கருதுகிறது.

கிழக்கு பிராந்தியத்தை நோக்கி நோட்டோவை விரிவுபடுத்துவதில்லை என்ற 1990இன் வாக்குறுதியை அமெரிக்கா மீறி இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் குறிப்பிடுகிறார்.

Wed, 02/02/2022 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை