தனது வளர்ச்சி சாதனையை தொடர்ந்து மூன்றாவது காலாண்டிலும் பேணும் அமானா தகாஃபுல் காப்புறுதி

தனது வளர்ச்சி சாதனையை தொடர்ந்து மூன்றாவது காலாண்டிலும் பேணும் அமானா தகாஃபுல் காப்புறுதி-Amana Takaful Insurance Growth Record

அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ் (Amana Takaful Insurance (ATI)), 2021 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டு (Q3) தொடர்பான அதன் நிதிப் பெறுபேறுகள், தொழில்துறையிலுள்ள ஏனைய நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில் சாதனையான செயற்றிறனைக் காட்டியுள்ளதுடன், இவ்வாண்டின் முந்தைய இரண்டு காலாண்டுகளில் நிறுவனம் பேணி வந்த விரைவான வளர்ச்சியை தொடர்ந்தும் தக்க வைத்துக்கொண்டுள்ளது. கடந்த ஆண்டின் 3ஆம் காலாண்டுடன் ஒப்பிடுகையில், அமானா தகாஃபுல் காப்புறுதியானது, அனைத்து முக்கிய காப்புறுதிப் பிரிவுகளிலும் வருடாந்த வளர்ச்சியைக் காண்பித்துள்ளது.

அமானா தகாஃபுல் இன்சூரன்ஸ், மெட்ரோ விற்பனை, பிரதிப் பொது முகாமையாளர் நௌஷாத் காசிம், நிறுவனத்தின் 3ஆம் காலாண்டு தொடர்பான இச்செயல்திறன் தொடர்பில் தெரிவிக்கையில், "இவ்வருடத்தின் 3ஆம் காலாண்டில் எமது செயற்றிறன் பற்றிய எமது ஆரம்ப பகுப்பாய்வின் அடிப்படையில், எமது வளர்ச்சி விகிதமானது தொழில்துறையில் உள்ளவர்களுடன் ஒப்பிடுகையில் இது மிக உயர்ந்த பெறுபேறு எனத் தோற்றுவிக்கிறது. அத்துடன் சில தொழில்துறைகளின் வளர்ச்சி விகிதங்களுடன் ஒப்பிடும்போது இது பல மடங்கு அதிகமாகும். இதன் விளைவாக, 2021 இல் அமானா தகாஃபுலின் ஒட்டுமொத்த சந்தைப் பங்கு, தொடர்ந்தும் மேல்நோக்கிய வளர்ச்சிப் பாதையை பேணுவதை காண்பிக்கிறது. அத்துடன் 3ஆம் காலாண்டில் 26% எனும் குறிப்பிடும்படியான வருடாந்த விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இலங்கையின் காப்புறுதித் துறையானது, கொவிட் தொற்றின் மூன்றாவது அலையின் போதான கடினமான காலத்தை எதிர்கொண்ட நிலையில் இச்செயற்றிறன் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்." என்றார்.

வருடாந்த அடிப்படையில் நோக்குவோமாயின், 2021 இன் 3ஆம் காலாண்டில், அமானா தகாஃபுல் ஆனது அனைத்து பிரதான காப்புறுதி திட்டங்களிலும் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. ஒட்டுமொத்தமாக, அனைத்து வகையான வாகனம் அல்லாத காப்புறுதியில் 45% வளர்ச்சியையும், வாகன காப்புறுதி பிரிவுகளில் 11% வளர்ச்சியையும் பதிவு செய்துள்ளது. 2021 இன் 3ஆம் காலாண்டில் பதிவான அதன் மிகப்பெரிய வாகனமல்லாத காப்புறுதியாக கடல்சார் காப்புறுதி அமைந்துள்ளதுடன், அவ்வளர்ச்சி 79% ஆகும். அமானா தகாஃபுலின் இரண்டாவது பெரிய வளர்ச்சிப் பிரிவான மருத்துவக் காப்புறுதியானது 77% அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அமானா தகாஃபுலின் தீ மற்றும் பொறியியல் பிரிவும் 36% வளர்ச்சியை காண்பித்துள்ளது. தொழில்துறையின் சராசரியுடன் ஒப்பிடும்போது, குறிப்பாக துறையில் முன்னணியில் உள்ள சில நிறுவனங்கள் தங்களது வருமானத்தில் சரிவை பதிவு செய்த சூழலுடன் ஒப்பிடுகையில், இவ்வனைத்து வளர்ச்சி வீதங்களும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகமாகும்.

நிறுவனத்தின் இந்த நிலைபேறான செயற்றிறன் குறித்து அமானா தகாஃபுலின் பிரதான விற்பனை அதிகாரி சுரேஷ் பஸ்நாயக்கவிடம் வினவியபோது, “ஒட்டுமொத்தமாக, நாடு முகம்கொடுத்த முடக்கங்கள் மற்றும் பயணக் கட்டுப்பாடுகளின் போது எதிர்கொண்ட தடைகளுக்குப் பின்னர் காப்புறுதித் துறை மீண்டுள்ளது. ஆயினும், அமானா தகாஃபுல் காப்புறுதி நிறுவனமாகிய எமது குழு, எமது வர்த்தகநாமத்தின் வாக்குறுதி, சேவை வழங்குதல் ஆகியவற்றின் அடிப்படையில் பல வாடிக்கையாளர்களை ஈர்ப்பதனை நோக்காகக் கொண்டு, நீண்ட பயணத்தை மேற்கொண்டுள்ளது. இத்தொடர்ச்சியான வளர்ச்சியை, 2021ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து வாடிக்கையாளர்களின் போக்குடன் எம்மால் காண முடிந்துள்ளது. இவ்வேளையில், எமது பங்குதாரர்கள் அனைவரின் நம்பிக்கை மற்றும் அசைக்க முடியாத அர்ப்பணிப்புக்காக நான் முழு மனதுடன் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன்." என்றார்.

அமானா தகாஃபுல் காப்புறுதி பற்றி:
அமானா தகாஃபுல் காப்புறுதியானது, இலங்கையின் காப்புறுதியில் (தகாஃபுல்) தனித்துவமான கருத்தாக்கத்தின் முன்னோடியாக அமைந்துள்ளது. அது வாடிக்கையாளர்களை மையப்படுத்தியதும் நெறிமுறை நடைமுறைகளை அடிப்படையாகக் கொண்டதுமானது என்பதுடன், இலங்கையில் இன்று முழுமையான காப்புறுதி நிறுவனமாக மாறியுள்ளது. இது காப்புறுதித் துறையின் ஒழுங்குபடுத்தல் (திருத்தப்பட்ட), 2011 ஆம் ஆண்டின் 3ஆம் இலக்க சட்டத்திற்கு இணங்குவதோடு, அனைத்து காப்புறுதி வழங்குநர்களையும் நீண்ட கால மற்றும் பொது காப்புறுதி வணிகங்களிலிருந்தும் தனித்துவமாக்கிறது. அமானா தகாஃபுல் காப்புறுதியானது முழு அளவிலான ஆயுள் மற்றும் பொதுக் காப்புறுதித் தீர்வுகள் மற்றும் சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் ஒட்டுமொத்த சுகாதாரத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்பட்ட சுகாதார காப்புறுதிக் கொள்கைகளை வழங்குகிறது.

Sun, 11/28/2021 - 15:20


copied Thinakaran.lk

கருத்துரையிடுக

புதியது பழையவை