பெற்றோலிய கூ. தா , மின்சார சபையின் நட்டமே பொருளாதார வீழ்ச்சிக்கு காரணம்

அநுர பிரியதர்சன யாப்பா எம்.பி

மின்சார சபை மற்றும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மூலம் எதிர்கொள்ள நேர்ந்துள்ள பாரிய நட்டமே நாட்டின் பொருளாதார பாதிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது என பொதுஜன பெரமுன எம்.பி அநுர பிரியதர்சன யாப்பா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த இரண்டு நிறுவனங்களுக்கு இடையில் நிலவும் முரண்பாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் விரிவான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், இன்று அல்லது நாளை தொடர்பில் அல்ல எதிர்காலம் தொடர்பிலும் முக்கிய கவனம் செலுத்துவது அவசியம் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று மின்சக்தி அமைச்சு மற்றும் வலு சக்தி அமைச்சு ஆகியவற்றின் மீதான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

விவாதத்தில் தொடர்ந்தும் உரையாற்றிய அவர்:

இத்துறைகளில் நிலவும் முக்கிய பிரச்சினையாக தற்போதைய டொலர் பிரச்சினை மற்றும் விற்பனை நடவடிக்கைகளில் உள்ளடங்கும் பிரச்சினைகள் ஆகியவற்றை குறிப்பிட முடியும். அந்த வகையில் பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் மின்சார சபையும் நட்டத்தில் இயங்கும் இரண்டு முக்கிய நிறுவனங்களாகவே தொடர்ச்சியாக உள்ளன. இந்தத் துறைகளில் பிரச்சினைகள் உள்ளன. அந்த பிரச்சினைகளுக்கு தீர்வுகாணும் வகையில் அரசாங்கம் விரிவான பேச்சுவார்த்தையை மேற்கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும் இந்த துறைகளுக்கு வெளிநாட்டு முதலீடு அவசியம் என்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். அவ்வாறு வெளிநாட்டு முதலீடுகள் மேற்கொள்ளப்படாதவிடத்து மேலும் பல பாதிப்புக்களை எதிர்காலத்தில் எதிர்நோக்க வேண்டிவரும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம், ஷம்ஸ் பாஹிம்

Tue, 11/30/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை