பல்கேரியாவில் பஸ் விபத்து: திடீர் தீ பரவி 45 பேர் பலி

மேற்கு பல்கேரியாவில் பஸ் வண்டி ஒன்று மோதி தீப்பிடித்த சம்பவத்தில் 12 சிறுவர்கள் உட்பட குறைந்தது 45 பேர் பலியாகியுள்ளனர்.

தலைநகர் சொபியாவின் தென் மேற்காக உள்ள கிராமத்திற்கு அருகில் நேற்று அதிகாலையில் நெடுஞ்சாலை ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வடக்கு மசிடோனியாவில் பதிவு செய்யப்பட்ட இந்த பஸ் வண்டி துருக்கியில் இருந்து திரும்பிய சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்துள்ளது.

பஸ் வண்டியில் இருந்து தப்பிய ஏழு பேர் தீக்காயங்களுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

பஸ் தீப்பிடித்ததா அல்லது மோதிய பின்னர் தீ பரவியதா என்பது பற்றி தெளிவில்லாமல் உள்ளதாக பல்கேரிய உள்துறை அமைச்சு அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

நெடுஞ்சாலை தடுப்பில் இந்த வாகனம் மோதி இருப்பதாக அதிகாரி ஒருவர் கூறி இருப்பதோடு வீதித் தடுப்பின் ஒரு பகுதி விலகி இருப்பதை சம்பவ இடத்தில் எடுக்கப்பட்ட படங்கள் காட்டுகின்றன. துருக்கி நகரான ஸ்தான்பூலுக்கு வார இறுதியில் சுற்றுலாச் சென்ற இவர்கள் மசிடோனிய தலைநகர் ஸ்கொஜேவுக்கு திரும்பிக் கொண்டிருந்தபோதே விபத்து நேர்ந்திருப்பதாக மசிடோனிய வெளியுறவு அமைச்சர் புஜார் ஒஸ்மானி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

உயிர் தப்பிய ஒருவருடன் மசிடோனிய பிரதமர் சோரான் சேவ் பேசியபோது, பயணிகள் உறங்கி இருந்ததாகவும் வெடிப்புச் சத்தம் கேட்டே எழுந்ததாகவும் அந்தப் பயணி குறிப்பிட்டுள்ளார்.

“அவர் மற்றும் மேலும் ஆறு மேல் ஜன்னல்களை உடைத்து வெளியே பாய்ந்து உயிர் தப்பியுள்ளனர்” என்று சேவ் பல்கேரிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தை ஒரு பெரும் அவலம் என்று பல்கேரிய உள்துறை அமைச்சர் ஸ்டெபான் யானெவ் குறிப்பிட்டுள்ளார்.

“இந்த அவலச் சம்பவத்தில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும். அதனால் எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்களை எம்மால் தவிர்க்க முடியும்” என்று விபத்து இடம்பெற்ற இடத்தை பார்வையிடச் சென்ற அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

நெடுஞ்சாலையில் விபத்து இடம்பெற்ற பகுதி நேற்று மூடப்பட்டது. தீயால் பஸ் வண்டி கருகியிருப்பது சம்பவ இடத்தில் இருந்து எடுக்கப்பட்ட படங்கள் காட்டுகின்றன.

இதில் உயிரிழந்தவர்களின் உடல்கள் முழுமையாக தீயில் கருகி இருப்பதாக சம்பவ இடத்திற்கு வந்த பல்கேரிய உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஓட்டுநரின் மனிதத் தவறு அல்லது தொழில்நுட்பக் கோளாறு ஆகிய இரண்டு கோணங்களில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக விசாரணைச் சேவை தலைவர் பொரிஸ்லேவ் சரபோவ் தெரிவித்துள்ளார்.

Wed, 11/24/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை