பாகிஸ்தான் அரசாங்கத்தின் நிதியமைச்சர், செனட்டர் ஆகியோருக்கு வெளிநாட்டு வங்கிகளில் பெருமளவு நிதி

பாகிஸ்தான் அரசின் நிதியமைச்சர் சௌகத் தாரிக் மற்றும் செனட்டர் பைசல் வவ்டா ஆகியோர் வெளிநாடுகளில் பெருமளவு நிதியை வங்கிகளில் வைத்திருப்பதாக தெரியவந்துள்ளது என பாகிஸ்தான் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

பண்டோரா பேப்பர்ஸ் தகவல்களின் அடிப்படையில் இச்செய்திகள் வெளியாகியிருப்பதோடு பாகிஸ்தானைச் சேர்ந்த 700 நபர்களுக்கு வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் இருப்பதாக புலனாய்வுப் பத்திரிகையாளர்களான உமர் சீமாவும் பக்குர் துரானியும் தெரிவித்துள்ளனர்.

த நியூஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள புலனாய்வுத் தகவலின் பிரகாரம் ஜாங்ஸ் குழுமத்தின் பிரதான ஆசிரியரான மிர்ஷக்கிலுன் ரெஹ்மான், ‘டோன்’ பத்திரிகையின் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹமீட் ஹாரூன், எக்ஸ்பிரஸ் மீடியா குழுமத்தின் நிறைவேற்று அதிகாரி சுல்தான் அலி லெக்கானி ஆகியோருக்கும் வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

பிரிட்டிஷ் வேர்ஜின் தீவுகளில் ரெஹ்மானுக்கு புறுளக்வூட் என்ற பெயரில் ஒரு நிறுவனம் இருப்பதாகவும் 2008 ஏப்ரல் 17ம் திகதி தனது பங்குகளை அவர் மாற்றியிருப்பதாகவும் புலனாய்வுத் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன. ஏன் அங்கே நிறுவனமொன்றை ஆரம்பித்தீர்கள் எனக் கேட்கப்பட்ட போது முதலீட்டுக்கான சிறந்த வாய்ப்பு அங்கே காணப்படுவதாகவும் வரிச்சலுகை, இரகசியம் பேணல் என்பனவற்றில் உத்தரவாதம் உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதே சமயம் சீஷெல்ஸ் தீவுகளில் டோன் பத்திரிகையின் ஹாரூன், பார்ட்னி என்ற பெயரில் நிறுவனமொன்றை வைத்திருப்பதாகவும் அது ஓட்டத்துக்கு அமைவானது என்றும் பாகிஸ்தான் அதிகாரிகளுக்கு அது தொடர்பாக அறிவிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். லக்கானி குடும்பத்தினரிடம் அவரது வெளிநாடு வங்கி முதலீடுகள் தொடர்பாக வினவிய போது தமது நிறுவனங்கள் அனைத்தும் சட்டபூர்வமானவை எனத் தெரிவிக்கப்பட்டதாகத் தெரிய வந்துள்ளது.

Fri, 10/08/2021 - 12:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை