பிரான்ஸ் திருச்சபை உறுப்பினர்களின் மீது 216,000 பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டு

1950 தொடக்கம் பிரான்ஸ் கத்தோலிக்க திருச்சபை உறுப்பினர்களால் சுமார் 216,000 சிறுவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகி இருப்பதாக சுயாதீன விசாரணை ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது. எனினும் திருச்சபையின் சாமானிய ஊறுப்பினர்களையும் சேர்க்கும்போது இந்த எண்ணிக்கை 330,000 ஆக அதிகரிக்கக் கூடும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

இது பெரும் எண்ணிக்கையாக உள்ளது என்று இந்த விசாரணைக் குழுவின் தலைவர் ஜீன் மார்க் சவுவ் தெரிவித்துள்ளார். இந்த கண்டுபிடிப்புகள் தொடர்பில் பிரான்ஸ் திருச்சபை ‘கவலை மற்றும் அதிர்ச்சியை’ வெளியிட்டுள்ளதோடு மன்னிப்பும் கேட்டுள்ளது.

இந்த அறிக்கை பிரான்ஸ் வரலாற்றில் ஒரு திருப்புமுனை என்று குறிப்பிட்டிருக்கும் பாதிக்கப்பட்ட ஒருவர், கத்தோலிக்க திருச்சபை அதன் செயற்பாடுகளை மீளாய்வு செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார். ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தி வரும் பாலியல் துஷ்பிரயோக விவகாரத்தின் தொடர்ச்சியாகவே இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.

2018 ஆம் ஆண்டு பிரான்ஸ் கத்தோலிக்க திருச்சபையினால் இந்த விசாரணைக்கு ஆணையிடப்பட்டது. இந்நிலையில் நீதிமன்றம், பொலிஸ் மற்றும் திருச்சபைப் பதிவுகள் மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகளின் வாக்குமூலங்களை பெற்று இரண்டரை ஆண்டுகளுக்கு மேல் செலவிட்டு இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

ஆனால், விசாரணை குழு மதிப்பிட்ட பல வழக்குகள் பிரான்ஸ் சட்டப்படி தண்டனைக்கு உட்படுத்த முடியாத வகையில் பழைய வழக்குகளாக உள்ளன.

இதில் மொத்தம் 115,000 பாதிரியார்கள் மற்றும் ஏனைய மதகுருக்கள் என 2,900 தொடக்கம் 3200 வரையான துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்கள் தொடர்பில் ஆணைக்குழு ஆதாரங்களை திரட்டியுள்ளது. எனினும் இந்த எண்ணிக்கை குறைவானதாக இருக்கலாம் என்று கணிக்கப்படுகிறது.

பாதிக்கப்பட்ட அதிகப் பெரும்பாலானவர்கள் பல்வேறு சமூகப் பின்னணிகளைக் கொண்ட இளம் பருவத்திற்கு முந்தைய சிறுவர்கள் என்று சுமார் 2,500 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Wed, 10/06/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை