விசாரணைகளுக்கு இலங்கை அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்கும்

அடிப்படைவாத தாக்குதல் தெற்காசிய நாடுகளில் மட்டுமல்ல முழு உலகிலும் தாக்கம்

SLPP காரியாலயஊடவியலாளர்கள்மாநாட்டில் வெளிவிவகார அமைச்சர் G.L.பீரிஸ் கருத்து

புலிகள் மீதான பிரித்தானியாவின் தடை ஏனைய உலக நாடுகளுக்கு சிறந்ததோர் எடுத்துக்காட்டு எனவும் தெரிவிப்பு

 

'

நியூசிலாந்து சுப்பர் மார்க்கட்டில் கத்திக் குத்து தாக்குதல் நடத்திய இலங்கை பிரஜை தொடர்பில் நியூசிலாந்து அரசாங்கம் முன்னெடுக்கும் விசாரணை நடவடிக்கைளுக்கு இலங்கை அரசாங்கம் முழுமையான ஒத்துழைப்பை வழங்கும் என வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்தார்.

அடிப்படைவாதிகளின் தாக்குதல்கள் எவ்வழியிலும் முன்னெடுக்கப்படலாம் என்பதை உலக நாடுகள் தற்போது அறிந்து கொண்டுள்ளன.தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை பிரிட்டன் தொடர்ந்து நீடித்துள்ளமையை பிற நாடுகளுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக கருத வேண்டும். விடுதலை புலிகள் அமைப்பின் மீள் எழுச்சி அனைத்து நாடுகளின் நிலையியல் தன்மைக்கு அச்சுறுத்தலாக அமையுமெனவும் அவர் தெரிவித்தார்.

பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

அடிப்படைவாத தாக்குதல்கள் தென்னாசிய வலய நாடுகளில் மாத்திரமல்ல முழு உலகிலும் தாக்கம் செலுத்தியுள்ளன. கடந்த வாரம் நியூசிலாந்து நாட்டில் சுப்பர் மார்க்கட்டில் கத்திக்குத்து தாக்குதல் நடத்திய இலங்கையர் அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

தாக்குதலை மேற்கொண்ட இலங்கையர் தொடர்பில் நியூசிலாந்து அரசாங்கம் மற்றும் அந்நாட்டு பாதுகாப்பு தரப்பினர் முன்னெடுக்கும் அனைத்து விசாரணை நடவடிக்கைகளுக்கும் இலங்கை முழுமையான ஒத்துழைப்பை வழங்கும்.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் மீது பிரிட்டன் விதித்த தடையை நீக்க கோரி புலம்பெயர் அமைப்புக்கள் முன்னெடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளன. விடுதலை புலிகள் அமைப்பு மீதான தடையை பிரிட்டன் தொடர்ந்து நீடித்துள்ளமை வரவேற்கத்தக்கது என அவர் தெரிவித்தார்.

 

லோரன்ஸ் செல்வநாயகம்

Tue, 09/07/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை