ஆப்கானிஸ்தான்: ஜனாதிபதி மாளிகையில் தலிபான் தலைவர்களுக்கு இடையே மோதல்

ஹக்கானி குழு பற்றி துணை ஜனாதிபதி அதிருப்தி

ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் புதிய அரசை கட்டியெழுப்புவது தொடர்பில் அந்தக் குழுவின் தலைவர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

தலிபான் இணை நிறுவனர் முல்லா அப்துல் கானி பரதர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர் ஒருவருக்கு இடையே ஜனாதிபதி மாளிகையில் வைத்து வாக்குவாதம் இடம்பெற்றருப்பதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது.

தலிபான் தலைமைகளுக்கு இடையே முரண்பாடு வெடித்தது தொடக்கம் அண்மைய நாட்களாக பரதர் பொது வெளியில் இருந்து காணாமல்போயிருப்பதாக உறுதி செய்யப்படாத செய்திகள் கூறுகின்றன.

இதனை தலிபான்களின் உத்தியோகபூர்வ அறிவுப்புகள் மறுத்துள்ளன.

கடந்த மாதம் ஆப்கானை கைப்பற்றிய தலிபான்கள், அந்நாட்டை ‘இஸ்லாமிய எமிரேட்’ என்று அறிவித்தனர். இதனைத் தொடர்ந்து ஆண்களை மாத்திரம் உள்ளடங்கிய அமைச்சரவை ஒன்று அறிவிக்கப்பட்டதோடு அதில் கடந்த இரண்டு தசாப்தங்களில் அமெரிக்க படைகள் மீது பாரிய தாக்குதல்களை நடத்திய சிலரும் உள்ளடங்குகின்றனர்.

இந்நிலையில் பரதர் மற்றும் ஹக்கானி வலையமைப்பின் முக்கிய புள்ளியான அகதிகள் தொடர்பான அமைச்சர் கலீலுர் ரஹ்மான் ஹக்கானிக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், அவர்களின் ஆதரவாளர்கள் கைகலப்பில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.

கட்டாரைத் தளமாகக் கொண்ட தலிபான் மூத்த உறுப்பினர் ஒருவர் மற்றும் இதில் தொடர்புபட்ட ஒருவர் கடந்த வாரம் இந்த வாக்குவாதம் இடம்பெற்றதை உறுதி செய்துள்ளனர்.

இடைக்கால அரசின் கட்டமைப்புப் பற்றி புதிய துணை பிரதமராக நியமிக்கப்பட்ட பரதர் அதிருப்தியில் இருந்ததே இந்த வாக்குவாதம் வெடிக்கக் காரணமாகி இருப்பதாக நெருங்கிய வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது.

ஆப்கானில் பெற்ற வெற்றிக்கான உரிமையை யார் பெறுவது என்பது பற்றி தலிபான் பிரிவுகளுக்கு இடையே பிரச்சினை ஏற்பட்டிருப்பதாக கூறப்படும் நிலையிலேயே இந்த மோதல் வெடித்துள்ளது.

தம்மை போன்றவர்கள் மேற்கொள்ளும் இராஜதந்திர செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும் என்று பரதர் கருதும் அதே நேரம், மூத்த தலிபான் உறுப்பினர்களால் முன்னெடுக்கப்படும் ஹக்கானி குழு மற்றும் அதன் ஆதரவாளர்கள், போராட்டம் மூலம் வெற்றியை அடைந்திருப்பதாக நம்கின்றனர்.

2020 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்புடன் தொலைபேசியில் உரையாடிய பரதர், அமெரிக்க ஜனாதிபதியுடன் நேரடியாக தொடர்புகொண்ட முதல் தலிபான் தலைவராக உள்ளார். அதற்கு முன்னர், அமெரிக்க துருப்புகள் ஆப்கானில் இருந்து வெளியேறுவது தொடர்பில் இடம்பெற்ற டோஹா உடன்படிக்கையில் தலிபான்கள் சார்பில் அவர் கைச்சாத்திட்டார்.

மறுபுறம் அண்மைய ஆண்டுகளில் ஆப்கான் படையினர் மற்றும் அதன் மேற்கத்தேய கூட்டணிகளுக்கு எதிராக பயங்கர தாக்குதல்களை நடத்திய குழுவாக ஹக்கானி உள்ளது. இந்தக் குழு அமெரிக்க பயங்கரவாதப் பட்டியலில் உள்ளது.

இந்தக் குழுவின் தலைவர் சிராஜுத்தீன் ஹக்கானி புதிய அரசின் உள்துறை அமைச்சராக உள்ளார்.

தலிபான்களின் வெளியுலகுக்குத் தெரிந்த தலைவர்களில் ஒருவராக இருக்கும் பரதர் அண்மைய நாட்களில் பொது வெளியில் காணக்கிடைக்காததை அடுத்தே கடந்த வார இறுதியில் தலிபான்களுக்குள் ஏற்பட்டிருக்கு முரண்பாடு பற்றிய செய்திகள் கசிய ஆரம்பித்தன. அவர் உயிரிழந்திருக்கலாம் என்ற சந்தேகமும் சமூக ஊடகங்களில் வெளியாகின.

எனினும் அந்தப் பிரச்சினையை அடுத்து பரதர் காபுலில் இருந்து வெளியேறி கந்தஹார் நகருக்கு சென்றுவிட்டதாக தலிபான் தரப்புகளை மேற்கோள்காட்டி பி.பி.சி செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

இந்நிலையில் பரதர் கடந்த திங்கட்கிழமை வெளியிட்ட ஓடியோ பதிவில், தாம் வெளியே சென்றிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். ‘இப்போது நான் எங்கே இருந்தாலும், நாம் அனைவரும் நன்றாக இருக்கிறோம்’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஓடியோ பதிவு தலிபான்களின் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது.

தங்களுக்கு இடையே எந்த வாக்குவாதமும் இல்லை என்று தலிபான்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர். ஆனால் பரதரைப் பற்றிய அவர்கள் கூறும் தகவல்கள் முரண்பட்டதாக உள்ளது. தலிபான்களின் உச்ச தலைவரைப் பார்ப்பதற்காக கந்தஹார் நகருக்கு பரதர் சென்றிருப்பதாக தலிபான்களின் ஒரு செய்தித் தொடர்பாளர் கூறினார். ஆனால் அவரே, பி.பி.சி பாஷ்தோவுடன் பேசும்போது, ‘அவர் சோர்வாக இருக்கிறார். அவருக்கு ஓய்வு தேவைப்படுகிறது’ என்று கூறினார்.

மோதல் தொடர்பாக தலிபான்கள் கூறும் கருத்துகளை ஆப்கானிஸ்தான் மக்கள் சந்தேகிப்பதற்கான நியாயமான காரணங்கள் இருக்கின்றன. 2015ஆம் ஆண்டு தங்களது நிறுவனரான முல்லா ஒமரின் மரணத்தை இரண்டு ஆண்டுகள் வரை மறைத்து வந்ததாகவும், அவரது பெயரிலேயே அறிக்கைகள் வெளியிடப்பட்டதாகவும் தலிபான்கள் ஒப்புக் கொண்டனர்.

பரதர் காபுலுக்குத் திரும்பி, வாக்குவாதங்கள் ஏதும் நடைபெறவில்லை என்று கெமராக்கள் முன் தோன்றிக் கூறுவார் என வேறுசிலர் கூறுகின்றனர்.

இதுவரை பொதுவெளிக்கு வராத தலிபான்களின் உயர்மட்டத் தலைவரான ஹெபதுல்லா அகுந்த்ஸதா தொடர்பாகவும் பல ஊகங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அவர்தான் தலிபான்களின் அரசியல், படை மற்றும் மத விவகாரங்களில் இறுதி முடிவெடுக்கும் அதிகாரம் கொண்டவர்.

Thu, 09/16/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை