அமெரிக்கப் படைகள் வெளியேற்றம்; வானை நோக்கி சுட்டு தலிபான்கள் கொண்டாட்டம்

காபுல் விமானநிலையத்தில் இருந்து அமெரிக்காவின் கடைசி இராணுவ விமானமும் பறந்ததை அடுத்து, ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளாக நீடித்த அமெரிக்காவின் மிக நீண்ட போர் முடிவுக்கு வந்துள்ளது.

அமெரிக்க தூதுவரை ஏற்றிய சி17 விமானம் நள்ளிரவு கடந்து உள்ளூர் நேரப்படி நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாலை புறப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இறுதிக் காலக்கெடுவுக்கு பின்னரும் ஆப்கானை விட்டு வெளியேற முடியாதவர்களுக்கு இராஜதந்திர செயற்பாடுகள் மூலம் உதவி அளிக்கப்படும் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்காவின் கடைசி விமானமும் புறப்பட்டதை அடுத்து தலிபான்கள் வானை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

2001 ஆம் ஆண்டு ஆப்கான் மீது படையெடுத்த அமெரிக்கா அங்கு கடும்போக்கு இஸ்லாமியவாத குழுக்கள் தலைதூக்காமல் இருப்பதற்கு நீண்டகால போர் நடவடிக்கை ஒன்றை முன்னெடுத்திருந்தது. அந்த செயற்பாடு தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

அதேபோன்று தலிபான்கள் ஆப்கானை கைப்பற்றிய பின்னர், கடந்த ஓகஸ்ட் 14 ஆம் திகதி விரைவாக ஆரம்பிக்கப்பட்ட பாரிய வெளியேற்ற நடவடிக்கைகளும் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.

இதன்படி அமெரிக்கா மற்றும் கூட்டணி விமானங்கள் மூலம் ஆப்கானில் இருந்து மொத்தம் 123,000க்கும் அதிகமானவர்கள் வெளியேற்றப்பட்டதாக பிராந்தியத்தின் அமெரிக்க முன்னணி கொமாண்டரான ஜெனரல் கென்னத் மக்கன்சி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இராணுவ நடவடிக்கை முடிவுக்கு வந்திருப்பதாகவும் புதிய இராஜதந்திர செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டிருப்பதாகவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் அன்தனி பிளிங்கன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க துருப்புகள் வெளியேறியதை வரலாற்றுத் தருணம் என்று குறிப்பிட்டிருக்கும் தலிபான்கள், ஆப்கான் ஒரு ‘சுதந்திரமான இறைமை கொண்ட நாடு’ என்று அறிவித்துள்ளனர்.

கடைசி அமெரிக்க துருப்புகள் ஆப்கானில் இருந்து வெளியேறியதை அடுத்து காபுல் விமானநிலையத்தின் கட்டுப்பாடு தலிபான் போராளிகள் வசமானது. காபுலின் இரவு வானில் பட்டாசு கொளுத்தியும் துப்பாக்கியால் வானை நோக்கி சுட்டும் தலிபான்கள் இதனை கொண்டாடினர்.

காபுல் விமானநிலையத்தில் இருந்து நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தலிபான் போச்சாளர் சபிஹுல்லா முஜாஹித், ‘ஆப்கான் இஸ்லாமிய எமிரேட் சுதந்திரம் மற்றும் இறைமை கொண்ட நாடு என்பதில் எமக்கு எந்த சந்தேகமும் இல்லை.

அமெரிக்கா தோற்கடிக்கப்பட்டுவிட்டது. எமது தேசத்தின் சார்பில் உலகத்துடன் நல்லுறவை பேண நாம் விரும்புகிறோம்’ என்று குறிப்பிட்டார்.

ஆப்கானியர்களின் சுதந்திரம், விடுதலை மற்றும் இஸ்லாமிய பெறுமானங்கள் பாதுகாக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.

அமெரிக்க துருப்புகள் காபுல் விமானநிலைத்தில் இருந்து வெளியேறி சில மணி நேரத்திற்கு பின்னர் தலிபான் தலைவர்கள் அந்த விமானநிலையத்திற்குள் கூட்டாக நுழைந்து அதனை சுற்றிப்பார்த்தனர்.

எனினும் காபூலில் இருந்து வெளியேறுவதற்கு முன்னர் அங்குள்ள அமெரிக்காவின் 73 போர் விமானங்கள், நவீன ஏவுகணை தடுப்பு உபகரணங்கள் உள்ளிட்டவற்றை செயலற்றதாக்கி விட்டதாக, அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி கென்னத் மக்கன்சி தெரிவித்துள்ளார்.

இந்த விமானங்களால் மீண்டும் பறக்க முடியாது என்றும் தலிபான்களால் அவற்றை இயக்கவும் முடியாது என்றும் அவர் கூறினார். காபூல் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணிகளில் சுமார் 6 ஆயிரம் அமெரிக்க துருப்புகள் ஈடுபடுத்தப்பட்டனர் என கூறிய அவர், அவர்கள் கடைசியாக நாடு திரும்புவதற்கு முன்னர் தலா 10 இலட்சம் டொலர் மதிப்புள்ள 70 இராணுவ ஆயுத கவச வண்டிகளையும், 27 ஹும்வீஸ் இராணுவ டிரக்குகளையும் செயலற்றதாக மாற்றி விட்டனர் என தெரிவித்தார்.

அதே நேரம், காபூலில் இருந்து புறப்படும் வரை பாதுகாப்பு தேவை என்பதால், ரொக்கெட் எதிர்ப்பு கருவியான சி-ரேம் மட்டும் அதே நிலையில் விட்டு வைக்கப்பட்டு அதன் பின்னர் செயலற்றதாக மாற்றப்பட்டதாக அவர் கூறினார்.

காபுலில் உள்ள அமெரிக்க தூதரக செயற்பாடுகள் நேற்று முதல் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக அதன் இணையதளம் குறிப்பிட்டுள்ளது. எனினும் ஆப்கானில் உள்ள அமெரிக்க பிரஜைகள் மற்றும் அவர்களின் குடும்பங்களுக்கு கட்டாரில் இருந்து தொடர்ந்து உதவிகள் அளிக்கப்படும் என்று அது குறிப்பிட்டுள்ளது.

காபுல் விமானநிலைய முகாமைத்துவ செயற்பாடுகள் தொடர்பில் கட்டார் மற்றும் துருக்கியுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருப்பதாக தலிபான்கள் தெரிவித்துள்ளனர்.

Wed, 09/01/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை