சீனி வாங்க சதொசவுக்கு மக்கள் படையெடுப்பு

நாட்டில் பால்மா, சீனி, எரிவாயு, உட்பட பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலை உச்சத்தை தொட்டும், சில அத்தியாவசிய பொருட்கள் சந்தையில் இல்லாத நிலையில், கல்முனை  சதொசவில் நேற்று  (27) சீனி 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

சில வகை பால்மா விற்பனை  இடம் பெற்றதால் பெருமளவு மக்கள் சதொசவில் குவிந்திருந்தமையை காணக்கூடியதாக இருந்தது. அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்ய மக்கள் ஆர்வத்துடன் விற்பனை நிலையத்தை நோக்கி வந்தாலும் நாட்டின் கொரோனா சூழ்நிலை காரணமாக மக்களை கட்டுப்படுத்துவதில் பல்வேறு சிக்கல் நிலைகள் உள்ளதாக கல்முனை  சதொச முகாமையாளர் தெரிவித்தார்.

நாட்டின் நடுத்தர வர்க்கம் முதல் உயர்தர வர்க்கம் வரை கொரோனா அலையில் பொருளாதார பாதிப்பை சந்தித்திருக்கும் இந்த சூழ்நிலையில், விலையேற்றம் பாரிய சங்கடத்தை  ஏற்படுத்தியுள்ளதுடன், வாழ்வாதாரத்தை இழந்த குடும்பங்கள் பலதும் பசியுடன் நாட்களை கடத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. உரிய அதிகாரிகள் இவ்விடயத்தில் கரிசனை செலுத்தி அத்தியாவசிய பொருட்களின் விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கேட்டுக்கொள்கின்றனர்.

(கல்முனை மத்திய தினகரன் நிருபர்)

 
Sat, 08/28/2021 - 13:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை