ஆப்கானின் முக்கிய நகர் தலிபானிடம் வீழும் நெருக்கடி: மேலும் இரு நகரங்களில் மோதல்

ஆப்காஸ்தனின் பிரதான நகரங்களில் ஒன்றான தெற்கு ஹெல்மாண்ட் மாகாணத்தின் லஷ்கர் காஹ்வில் கடுமையான மோதல் இடம்பெற்று வரும் நிலையில் தலிபான்களிடம் வீழும் முதல் மாகாணத் தலைநகராக அது மாறும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

அமெரிக்க மற்றும் ஆப்கான் படைகளின் வான் தாக்குதலுக்கு மத்தியிலும் கிளர்ச்சியாளர்கள் லஷ்கர் காஹ் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தாம் தொலைக்காட்சி நிலையம் ஒன்றை கைப்பற்றியதாக தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் கிராமப் புறங்களுக்கு தப்பிச் சென்று அங்கு முகாமமைத்துள்ளனர்.

'சுற்றிவர எல்லா இடமும் சண்டை இடம்பெறுகிறது' என்று மருத்துவர் ஒருவர் பி.பி.சி தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார்.

நூற்றுக்கணக்கான மேலதிக துருப்பினர் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளர். ஆப்கானில் 20 ஆண்டுகளாக இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்ட அமெரிக்க படைகள் வாபஸ் பெறுவதாக அறிவித்த நிலையிலேயே அண்மைய மாதங்களில் தலிபான்கள் வேகமாக முன்னேற்றம் கண்டு வருகின்றனர்.

அமெரிக்க மற்றும் பிரிட்டன் இராணுவ செயற்பாடுகளின் மையமாக இருந்த பகுதியாக ஹெல்மாண்ட் உள்ளது. இங்கு தலிபான்களின் முன்னேற்றம் ஆப்கான் அரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

லஷ்கர் காஹ் வீழ்ந்தால் அது 2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் தலிபான்கள் கைப்பற்றும் முதல் மாகாணத் தலைநகராக இருக்கும். தலிபான்கள் தாக்குதல் தொடுத்திருக்கும் மேலும் பல மாகாணத் தலைநகரங்களில் இதுவும் ஒன்றாகும்.

தலிபான்களின் வெற்றி 'சர்வதேச பாதுகாப்பில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்' என்று நகரின் ஆப்கான் இராணுவ கொமாண்டர் எச்சரித்துள்ளார்.

'இது அப்கானின் போர் அல்ல இது சுதந்திரம்' மற்றும் துன்புறுத்தலுக்கு இடையிலான ஒரு போர்' என்று மேஜர் ஜெனரல் சமி சதாத் பி.பி.சிக்கு தெரிவித்தார்.

தலிபான் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் காரணமாக ஹல்மாண்ட் மாகாணத்தில் 11 வானொலிகள் மற்றும் நான்கு தொலைக்காட்சி வலையமைப்புகள் தமது ஒலி, ஒளிபரப்பை நிறுத்தியுள்ளதாக ஆப்கான் தகவல் அமைச்சு திங்கட்கிழமை குறிப்பிட்டது.

ஆப்கானின் இரண்டாவது மிகப்பெரிய நகரான கந்தஹாரை கைப்பற்றும் தலிபான்களின் முயற்சி தொடர்வதோடு அங்கு தொடரும் ரொக்கெட் தாக்குதல்களில் அங்குள்ள விமான நிலையம் கடந்த ஞாயிற்றுக்கிழமை இலக்கானது.

கந்தஹாரை கைப்பற்றினால் தலிபான்களின் ஓர் அடையாள வெற்றியாக அது அமையும். அது நாட்டின் தென்பகுதியை தமது பிடிக்குள் கொண்டுவர உதவியாக இருக்கும்.

நாட்டின் மேற்கில் ஹெரத் நகரும் தலிபான்களின் முற்றுகையில் உள்ளது. கடந்த பல நாட்களாக அரச படைக்கும் தலிபான்களுக்கும் இடையே அங்கு உக்கிர மோதல் இடம்பெற்று வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஐ.நா வளாகம் ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து அரச படை சில பகுதிகளை மீட்டுள்ளது.

அரச படையின் முன்னேற்றத்திற்கு ஆதரவாக குடிமக்கள் வீதிகளிலும் கூரைகள் மீது ஏறியும் 'அல்லாஹு அக்பர்' என்று கோசம் எழும்பும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன.

தலிபான்களின் முன்னேற்றத்தை தடுப்பதில் அரச படை நெருக்கடியை சந்தித்திருக்கும் நிலையில், மோதல் அதிகரிப்பதற்கு அமெரிக்க துருப்புகள் நாட்டை விட்டு திடீரென்று வெளியேறுவதே காரணம் என்று ஜனாதிபதி அஷ்ரப் கனி குற்றம்சாட்டியுள்ளார்.

'திடீரென்று எடுக்கப்பட்ட முடிவே எமது தற்போதைய நிலைமைக்கு காரணம்' என்று அவர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அமெரிக்காவின் வெளியேற்றம் 'விளைவுகளை' ஏற்படுத்தும் என்று கனி எச்சரிக்கை விடுத்தார்.

Wed, 08/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை