விண்வெளிக்கு சென்று திரும்பினார் அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்

அமேசான் நிறுவனத்தின் நிறுவனரான ஜெப் பெசோஸ் (57), தனது சொந்த நிறுவனம் உருவாக்கியுள்ள விண்வெளி ஓடம் மூலம் விண்வெளிக்கு வெற்றிகரமாகச் சென்று திரும்பினார்.

ஜெப் பெசோஸுக்குச் சொந்தமான ‘ப்ளூ ஒரிஜன்’ உருவாக்கியுள்ள விண்வெளி ஓடம், முதல்முறையாக மனிதர்களுடன் விண்ணில் செலுத்தப்பட்டது.

அதில், ஜெப் பெசோஸுடன் அவரது சகோதரர் மார்க் பெசோஸ், பெண் விண்வெளி வீராங்கனை வாலி பங்க் உள்ளிட்ட 4 பேர் இருந்தனர்.

18 வயதாகும் ஒலிவர் டேமன், 82 வயதாகும் வாலி பங்கும்தான் விண்வெளிக்குச் சென்ற மிகவும் குறைந்த மற்றும் அதிக வயதுடையவர்கள் ஆவர்.

மிகப்பெரிய ஜன்னல்களுடன் கூடிய விண்கலன் பூமியில் இருந்து விண்ணை நோக்கி சீறிப்பாய்ந்தது. அதில் இருந்தபடி பூமியின் கண்கொள்ளா காட்சியை அனுபவித்த இந்த குழுவினர் பின்னர் பூமிக்கு திரும்பினர்.

இந்தப் பயணத்தின் மூலம், விண்வெளிக்குச் சென்று திரும்பிய இரண்டாவது தொழிலதிபர் என்ற பெருமையை ஜெப் பெசோஸ் பெற்றுள்ளார்.

முன்னதாக, அமெரிக்காவை சேர்ந்த விர்ஜின் கலாக்டிக் என்ற விண்வெளி சுற்றுலா நிறுவனத்தின் உரிமையாளர் ரிச்சர்ட் பிரான்ஸன், அவரது நிறுவனம் தயாரித்த விண்வெளி விமானம் மூலம் கடந்த 11-ஆம் திகதி விண்வெளிக்குச் சென்று வந்தார்.

ஜெப் பெசோஸ், அண்மையில் தான் அமேசான் என்ற மின் வணிக நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பதவியில் இருந்து விலகினார். ப்ளூ ஒரிஜின் என்ற தமது கனவுத் திட்டமான விண்வெளி சுற்றுலாவுக்கு ராக்கெட் அனுப்பும் பணியில் இனி முழு கவனம் செலுத்தப்போவதாக அப்போது பெசோஸ் கூறியிருந்தார்.

இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் இரண்டு விண்வெளி சுற்றுலா பயண திட்டத்தை செயல்படுத்த ப்ளூ ஒரிஜின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஆனால், அதில் பயணம் செய்ய எவ்வளவு கட்டணம் என்பது இன்னும் இறுதி செய்யப்படவில்லை. தற்போதைய நிலையில், இந்த நிறுவனத்திடம் இரண்டு ரொக்கெட்டுகளும், விண்கலனும் உள்ளன. அதில் ஒரு ​ெராக்கெட் சுற்றுலா பயணிகள் சேவைக்கும், மற்றொன்று விண்வெளி ஆய்வுப் பணிக்காகவும் பயன்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Thu, 07/22/2021 - 12:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை