யாழ். அச்சுவேலி, குப்பிளானில் விவசாயிகளுக்கான களஞ்சிய வசதிகளை கட்டமைக்கும் செயற்றிட்டம் ஆரம்பம்

மத்திய கமத்தொழில் அமைச்சினால் மாகாண விவசாய திணைக்களத்தினூடாக கொவிட்- 19 அவசர நிலைமைகளின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் விவசாயிகளுக்கான களஞ்சிய வசதிகளை கட்டமைக்கும் செயற்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுகள் அச்சுவேலி பிரதேசத்திலும், குப்பிளான் தெற்கு விவசாய சம்மேளன பிரிவிலும் நேற்று (14) நடைபெற்றன.

நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட வடமாகாண ஆளுநர் திருமதி பி.எஸ்.எம்.சார்ள்ஸ் வெங்காய களஞ்சியத்துக்கான அடிக்கல்லை அச்சுவேலி பிரதேசத்திலும் உருளைக்கிழங்கு களஞ்சியத்திற்கான அடிக்கல்லைகுப்பிளான் தெற்கு விவசாய சம்மேளன பிரிவிலும் நாட்டினார்.

குறித்த நிகழ்வில் கருத்து தெரிவித்த வடமாகாண ஆளுநர் ,

ஜனாதிபதியின் 'சுபீட்சத்தின் நோக்கு'கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் நாட்டில் விவசாயத் துறையில் தற்போது ஒரு புரட்சி ஏற்பட்டிருக்கின்றது. குறிப்பாக இறக்குமதிகள் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு விவசாய மக்களுக்கு அனுகூலமான விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படுகிறன.

இதில் மிக முக்கியமான சேதனப் பசளை உற்பத்தி திட்டம் ஜனாதிபதியினால் முன் வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை ஐரோப்பிய ஒன்றியம் பாராட்டியுள்ளதுடன், சேதன முறையில் உருவாக்கப்பட்ட மரக்கறிகளுக்கான சந்தை வாய்ப்பு அதிகமாக இருப்பதனால் இச்சந்தர்ப்பத்தை உள்ளூர் உற்பத்தியாளர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

எனவே உள்ளூர் உற்பத்திகளுக்கு உள்நாட்டில் மட்டுமன்றி வெளிநாட்டிலும் சிறந்த விலையைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு ஜனாதிபதியினால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சேதனப்பசளை உற்பத்திக்கு யாழ்.மாவட்டம் சிறப்பானதொரு இடமென தெரிவிக்கப்பட்டதுடன் சேதனப்பசளை உற்பத்தியின் அதிகரிப்புக்கு அனைவரது ஒத்துழைப்பும் அவசியம் என தெரிவித்தார்.

இவ் விவசாய புரட்சியின் ஒரு அங்கமாகிய விவசாயிகளுக்கான களஞ்சிய வசதிக்கான வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இத்தகைய திட்டத்தை ஆரம்பிக்க உதவிய விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே மற்றும் அவரது முன்னைய செயலாளர் சுமித் பெரேரா ஆகியோருக்கு வட மாகாண ஆளுநர் தனது நன்றிகளை தெரிவித்தார்.

Fri, 07/16/2021 - 11:28


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை