ஈராக் கொரோனா வைத்தியசாலையில் தீ: 50க்கும் அதிகமானோர் உயிரிழப்பு

மூன்று மாதங்களில் இரண்டாவது சம்பவம்

ஈராக்கில் கொவிட்-19 தனிமைப்படுத்தல் வைத்தியசாலை ஒன்றில் ஏற்பட்ட தீயில் குறைந்தது 52 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் வைத்தியசாலையில் கடந்த மூன்று மாதங்களில் இடம்பெறும் இரண்டாவது தீ சம்பவமாக இது உள்ளது.

தெற்கு நகரான நஸ்ரியாவில் உள்ள அல் ஹுஸைன் வைத்தியசாலையில் கடந்த திங்கட்கிழமை இரவு இந்த தீ ஏற்பட்டது. கடும் போராட்டத்திற்கு பின்னர் சிவில் பாதுகாப்பு படையினரால் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

'ஒட்சிசன் டாங்கி வெடித்ததே தீ பரவ பிரதான காரணம்' என்று சுகாதார பணிப்பாளரை மேற்கோள்காட்டி ஏ.எப்.பி செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

கொவிட் தனிமைப்படுத்தல் வார்டில் அழிவை ஏற்படுத்திய தீயில் நேற்று 52 சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் மேலும் 22 பேர் காயமடைந்திருப்பதாகவும் உள்ளூர் சுகாதாரத் துறையின் பேச்சாளர் ஹைதர் அல் சமிலி தெரிவித்தார்.

'பாதிக்கப்பட்டவர்கள் தீயில் கறுகி உயிரிழந்திருப்பதோடு தொடர்ந்தும் தேடுதல் இடம்பெற்று வருகின்றது' என்றும் அவர் தெரிவித்தார். கட்டடத்திற்குள் மேலும் மக்கள் சிக்கி இருப்பதற்கான அச்சம் தற்போது நீங்குள்ளது என்றும் கூறினார். அந்த வார்டில் 70 படுக்கைகள் இருந்துள்ளன.

எனினும் பல நோயாளிகள் தொடர்ந்து காணாமல்போன நிலையில் இருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்று சுகாதார தரப்புகளை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. உயிரிழந்தவர்களில் இரு சுகாதார பணியாளர்களும் இருப்பதாக அதில் கூறப்பட்டது.

நேற்றுக் காலை வரை தீவிர தேடுதல் இடம்பெற்றதோடு, கட்டடத்திற்குள் கடும் புகை காரணமாக அந்த பணிகளில் இடையூறு இருந்து வந்தது. வைத்தியசாலை கட்டடத்திற்கு வெளியே அடர்த்தியான புகைமூட்டம் வெளி வரும் காட்சிகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளன. மருத்துவமனைக்கு வெளியே உறவினர்கள் மற்றும் நகர மக்கள் திரண்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆத்திரமடைந்த உறவினர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டதோடு இரு பொலிஸ் வாகனங்களுக்கும் தீ வைத்துள்ளனர்.

'இந்தத் தீ மற்றும் அப்பாவி நோயாளிகள் கொல்லப்பட்டதற்கு ஊழல் அதிகாரிகள் பொறுப்புக் கூற வேண்டும். எங்கே எனது தந்தையின் உடல்' என்று போர்வையால் போர்த்தி வைக்கப்பட்டிருக்கும் கறுகிய உடல்களில் தனது தந்தையின் உடலை தேடிக்கொண்டிருந்த இளைஞர் ஒருவர் குறிப்பிட்டார்.

ஈராக் பிரதமர் முஸ்தபா அல் காதிமி, நஸ்ரியா நகர் அமைந்திருக்கும் திகார் பிராந்தியத்தில் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். 'சம்பவத்திற்கான காரணம் மற்றும் விளைவுகள்' பற்றி பேச்சுவார்த்தை நடத்த அவசர கூட்டத்தை நடத்தவிருப்பதாக பிரதமர் நேற்றுக் காலை வெளியிட்ட ட்விட்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைநகர் பக்தாதில் சுகாதார அமைச்சு தலைமையகத்திலும் கடந்த திங்கட்கிழமை சிறிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டபோதும் அது உடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.

இதில் நஸ்ரியா வைத்தியசாலையில் ஏற்பட்ட தீ இந்த ஆண்டில் பதிவான இரண்டாவது சம்பவமாக உள்ளது.

கடந்த ஏப்ரலில் பக்தாதில் உள்ள கொவிட்-19 மருத்துவமனையில், மோசமான முறையில் வைக்கப்பட்டிருந்த ஒட்சிசன் சிலிண்டர்கள் வெடித்ததில் 82 பேர் கொல்லப்பட்டதோடு மேலும் 110 பேர் காயமடைந்தனர்.

இதில் கொரோனா தொற்றினால் சுவாசக் கருவிகள் பொருத்தப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளே அதிகம் பலியாகினர். இந்த சம்பவத்தை அடுத்து அப்போது சுகாதார அமைச்சராக இருந்த ஹசன் அல் தமீமி தமது பதவியை இராஜினாமா செய்தார்.

ஈராக்கில் 1.4 மில்லியனுக்கும் அதிகமான கொரோனா தொற்றுச் சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 17,000க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்.

அந்நாட்டின் சுமார் 40 மில்லியன் மக்கள் தொகையில் ஒரு மில்லியன் பேருக்கு மாத்திரம் குறைந்தது ஒரு தடவையேனும் தடுப்பு மருந்து வழங்கப்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

Wed, 07/14/2021 - 08:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை