அரசுக்கு 300 கோடி ரூபா வரி இழப்பு; ஸ்மார்ட்கெப் வாகனங்கள் இறக்குமதியில் முறைகேடு

கோபா குழுவின் அறிக்கையில் தெரிவிப்பு

டபிள் கெப் ரக வாகனத் தோற்றத்திற்கு சமமான முறையில் தயாரிக்கப்பட்டிருந்த ஸ்மார்ட்கெப் வாகன இறக்குமதியின்போது சிங்கல் கெப் வாகனங்களுக்கு அறவிடப்படும் குறைந்த வரி சுங்கத் திணைக்களத்தினால் அறிவிடப்பட்டிருப்பதுடன், இதன் ஊடாக ஒரு வாகனத்தில் தலா ஒரு மில்லியன் ரூபா வீதம் 3,000 வாகனங்களில் 03 பில்லியன் ரூபா அரசாங்கத்துக்கு நட்டம் ஏற்பட்டிருப்பதாக அரசாங்க கணக்குகள் பற்றிய குழு (கோபா குழு) தனது அவதானிப்பில் தெரிவித்துள்ளது.

இதனை விடவும், வாகனங்களை சுங்கத் திணைக்களத்தின் ஊடாக இறக்குமதி செய்யும்போதும் அவ்வாகனங்களை மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவுசெய்யும்போதும் பாரியளவில் வரி முறைகேடுகள் இடம்பெறுவதாகவும் இதனால் அரசாங்கத்துக்குப் பெருமளவு வரி வருமானம் இழக்கப்படுவதாகவும் குழுவின் அவதானிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவின் தலைவர் பேராசிரியர் திஸ்ஸ வித்தாரனவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒன்பதாவது பாராளுமன்றத்தின் அரசாங்க கணக்குகள் பற்றிய குழுவினுடைய முதலாவது அறிக்கையிலேயே இந்த அவதானிப்புக்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.

விசேட செயற்பாடுகளுக்கான வாகனங்களாக சுங்கத் திணைக்களத்துக்குக் குறைந்த வரியைச் செலுத்தி இறக்குமதி செய்யப்படும் வாகனங்கள் இரட்டை கருமமாற்றல் வாகனங்களாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவுசெய்யப்படுவது குறித்தும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைவிட 2010 - – 2019 காலப் பகுதியில் 44 வான்கள் குறைந்த வரியைச் செலுத்தி விசேட செயற்பாடுகளுக்கான வாகனங்களாக இறக்குமதி செய்யப்பட்டு, பயணிகள் மற்றும் சரக்குப் போக்குவரத்தை மேற்கொள்ளும் நோக்கில் அவ்வாகனங்கள் பின்னர் இரட்டை கருமமாற்றல் வாகனங்களாக மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களத்தில் பதிவுசெய்யப்பட்டிருப்பதால் ஏறத்தாழ 1300 மில்லியன் ரூபா வரியை அரசாங்கம் இழந்துள்ளது.

பொதுஜன தொடர்பாடல் உபகரணங்கள் பொருத்தப்பட்ட விசேட செயற்பாடுகளுக்கான வாகனங்கள் பிரிவின் கீழ் 1.5 மில்லியன் ரூபா வரியைச் செலுத்தி இறக்குமதி செய்யப்படும் டொயாட்டா லான்ட் குரூஸர் ரக வாகனம் சுங்கத் திணைக்களத்தினால் உரிய முறையில் பயணிகள் போக்குவரத்துப் பிரிவின் கீழ் வெளிக்கொண்டுசெல்ல அனுமதி வழங்கப்படாமையால் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட வரி இழப்பு 56 மில்லியன் ரூபா என்றும் குழுவின் அவதானிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 

Thu, 07/22/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை