கொரோனா தொற்று, அனர்த்தம்; எந்த நிலைமையாயினும் சவாலை ஏற்றுக்கொள்ள நாம் தயார்

தொற்று நிலைமையாக இருப்பினும், அனர்த்த நிலைமையாயினும் எந்தச் சூழ்நிலைகளிலும் மக்களுடன் அந்தச் சவாலை ஏற்றுக்கொள்ள ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் நாம் தயாரென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (07) தெரிவித்தார்.

பயணத்தடையின் போது மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுமென அறிந்த போதிலும் ஒரு உயிரின் மதிப்பறிந்து அரசாங்கம் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களுக்கு ஆதரவளிக்குமாறு இதன்போது பிரதமர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.

புதிய களனி பாலம் முதல் அத்துருகிரிய வரையான 16.4 கிலோ மீற்றர் நீளமான அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கெடம்பே, கொஹுவல, கொம்பனித்தெருவில் நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை, பாலதக்ஷ மாவத்தை மற்றும் சிற்றம்பலம் ஏ கார்டினர் மாவத்தை ஆகிய இடங்களில் நிர்மாணிக்கப்படும் 06 மேம்பாலங்களின் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அலரி மாளிகையில் இருந்தவாறு நேற்று (07) வேலைத்திட்டங்களின் ஆரம்ப நிகழ்வு பிரதமரின் தலைமையில் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நடைபெற்றது. அங்கு பிரதமர் ஆற்றிய முழுiமையான உரை வருமாறு,

கொழும்பு மற்றும் கண்டி வாகன நெரிசலுக்கு தீர்வு காணும் திட்டங்களையே இன்று ஆரம்பித்துள்ளோம்.இவ்விடங்களில் காணப்படும் வாகன நெரிசல் தொடர்பில் பலர் வரலாற்றில் எத்தனை கலந்துரையாடல்களை மேற்கொண்டனர்? என்பதை நீங்கள் அறிவீர்கள். வாகனங்களின் வரிசை நாளுக்கு நாள் நீண்டுக்கொண்டே சென்றதே தவிர எவரும் இதற்கு நடைமுறை தீர்வு வழங்கவில்லை.

காலம் என்பது எம் அனைவருக்கும் முக்கியமானதாகும். மக்களுக்கு போன்றே இறுதியில் அது நாட்டிற்கும், நாட்டின் எதிர்காலத்திற்கும் ஒரே மாதிரி முக்கியம் என்பதையும் நீங்கள் அறிவீர்கள். வாகன நெரிசலினால் பொதுமக்களுக்கு வீதியில் செலவிடும் காலத்தை குறைத்து, அக்காலத்தை ஏதேனும் முக்கியமான விடயத்திற்கு பயன்படுத்த முடியுமாயின் அதை நாம் பெற்ற வெற்றியாக நான் பார்க்கின்றேன்.
இன்று நாம் ஆரம்பிக்கும் திட்டங்களுள் முழுமையாக தூண்களின் மீது நிர்மாணிக்கப்படும் இந்நாட்டின் 08ஆவது அதிவேக நெடுஞ்சாலை திட்டமும் உள்ளடங்கும். அந்த அதிவேக நெடுஞ்சாலை புதிய களனி பாலத்திலிருந்து அத்துருகிரிய வரை நிர்மாணிக்கப்படும்.

நான்கு வழிப்பாதை அதிவேக நெடுஞ்சாலை எமது நாட்டின் முதலாவது மற்றும் இரண்டாவது அதிவேக நெடுஞ்சாலைகளை ஒன்றுடனொன்று இணைப்பது விசேட அம்சமாகும். அத்துடன் தெமடகொட, ராஜகிரிய, கொஸ்வத்த மற்றும் ஹோகந்தர உள்ளக பரிமாற்றம் நிர்மாணிக்கப்படும் போது, கொழும்பு வாகன நெரிசலிலிருந்து கணிசமான அளவில் எமக்கு குறைக்க முடியும்.

இந்த அதிவேக நெடுஞ்சாலையில் 15 ஆண்டு கால செயல்பாடு மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட கட்டுமானத்திற்கு வரையறுக்கப்பட்ட சைனா ஹாபர் பொறியியலாளர் நிறுவனம் சுமார் 135 பில்லியன் ரூபாய் நிதியை செலவிட்டுள்ளது. அவர்களுக்கும் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

சுபீட்சத்தின் நோக்கு கொள்கைக்கமைய நாம் நாட்டை கட்டியெழுப்ப மக்களுக்கு உறுதியளித்தோம். கொவிட்19 தொற்றுக்கு மத்தியிலேனும் நாட்டின் அபிவிருத்தி வேலைத்திட்டங்களை நிறுத்த வேண்டாமென ஜனாதிபதி எம் அனைவருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.

இந்தத் தொற்று நிலைமை எதுவும் இல்லாமலேயே இன்றுள்ள எதிர்க்கட்சி அன்று எந்தவொரு வேலையும் செய்யாதிருந்தது. நாம் என்ன செய்கின்றோமென இன்று அவர்கள் எம்மிடம் கேட்கின்றனர்.

ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக நாங்கள் மக்களுக்கு தடுப்பூசிகளைக் வழங்குவோம் என்று உறுதியளித்தோம். தடுப்பூசி மூலம் எங்கள் மக்களைப் பாதுகாக்கும் திட்டத்தை நாங்கள் தொடர்ந்து செயல்படுத்துகிறோம். சில குறைபாடுகளை சரிசெய்ய முன்வந்துள்ளோம். இந்த தொற்றுநோயைக் கட்டுப்படுத்த வைத்தியர்கள் உள்ளிட்ட மருத்துவ ஊழியர்கள், முப்படையினர், பொலிஸ் மற்றும் அதை ஆதரிக்கும் மக்கள் பெரும் தியாகங்களைச் செய்கிறார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

சிலருக்கு அதனை சகித்துக்கொள்ள முடியாது. அவர்கள் இங்கேயும் அங்கேயும் சொல்லி அதை நாசப்படுத்த முயற்சிக்கின்றனர். தவறான பிரசாரங்களை மேற்கொள்கின்றனர் என்றார்.

Tue, 06/08/2021 - 08:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை