மௌலவிமார், பள்ளிவாசல் ஊழியர்களுக்கும் 5000 ரூபா

பிரதமரின் இணைப்பாளர் ஹஸன் மௌலானா

மௌலவிமார்கள், பள்ளிவாசல்களில் தொழில் புரியும் ஊழியர்கள் 5,000 ரூபா கொடுப்பனவைப் பெறுவதற்கான தகுதியுள்ளவர்களென அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரான பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவின் அறிவுறுத்தலுக்கமைய கொவிட் 19 தொற்று பரவல் கட்டுப்பாட்டின் நிமித்தம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாடு காரணமாக வருமானம் இழந்துள்ள இந்து, இஸ்லாம். கிறிஸ்தவ மத குருமாரின் குடும்பங்களுக்கும் 5000 ரூபா கொடுப்பனவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான ஆலோசனைகளை புத்த சாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர், சமுர்த்தி, மனைப் பொருளாதாரம், நுண்நிதி, சுயதொழில், வணிக மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளருக்கு வழங்கியுள்ளார்.

இதேவேளை செயலாளர் 2021 மே மாதம் 31 ஆம் திகதி வெளியிட்டுள்ள சுற்று நிருபத்தின் படி, பள்ளிவாசல்களில் தொழில் புரியும் ஊழியர்களும் இப்பயணக் கட்டுப்பாடு காரணமாக வருமானம் இழந்திருப்பின் அவர்களும் 5,000 ரூபா கொடுப்பனவைப் பெறுவதற்கான தகுதியைப் பெற்றுள்ளனர்.

அதனால் அந்தந்த பிரதேசங்களிலுள்ள பள்ளிவாசல்களில் கடமைபுரியும் மௌலவிமார் தமது மதகுருவுக்கான அடையாள அட்டை அல்லது பள்ளிவாசல் நிர்வாக சபையினால் பள்ளிவாசலில் கடமைபுரியும் மௌலவியென உறுதிப்படுத்தப்பட்ட கடிதத்தைக் காண்பித்து அந்தந்த கிராம அலுவலகர்களிடமிருந்து இந்த உதவித் தொகையைப் பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிரதமரின் முஸ்லிம் சமய மற்றும் கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான இணைப்பாளர் அஸ்ஸெய்யத் கலாநிதி ஹஸன் மௌலானா தெரிவித்தார்.

இந்த பயணக் கட்டுப்பாட்டின் விளைவாக வருமானம் இழந்துள்ள மௌலவிமார் தத்தமது பிரதேச கிராம உத்தியோகத்தர்களைத் தொடர்பு கொண்டு இந்த நிவாரணக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்ள முடியுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Fri, 06/04/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை