மலையகத்தில் சீரற்ற காலநிலை

- தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் மண்சரிவு அனர்த்தம்
- நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு
- இரத்தினபுரி மாவட்டத்திற்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை
- பனிமூட்டமான காலநிலை

மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக  மக்களின்  இயல்பு  வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடைமழையால் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் வெகுவாக அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.

நேற்றுமுன்தினம் இரவு ஒரு வான்கதவு திறக்கப்பட்ட நிலையில் நீர்மட்டம் அதிகரித்ததால் நேற்று அதிகாலை மேலும் ஒரு வான்கதவு திறக்கப்பட்டது. இதனால் சென்கிளயர் நீர்வீழ்ச்சியின் நீர்மட்டமும் அதிகரித்து ரம்மியமாக காட்சியளிக்கின்றது.

அத்துடன், மேல் கொத்மலை அணைக்கட்டுக்கு கீழ் ஆற்றுப்பகுதியை பயன்படுத்துபவர்கள் அவதானத்துடன் இருக்குமாறு கோரப்பட்டுள்ளது. இந்த மழை காரணமாக லக்ஷபான நீர்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள், கெனியன் விமலசுரேந்திர, நவ லக்ஷபான ஆகிய நீர்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதுடன், வான்கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாக மின்சார சபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட இருவேறு பகுதிகளில் ஏற்பட்ட மண்சரிவில் ஆறு குடியிருப்புகள் சேதமாகியுள்ளன.

வட்டவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சுயதனிமை பிரதேசமாக அறிவிக்கப்பட்டுள்ள வெலிஓயா கீழ் பிரிவில் நேற்று 25 அதிகாலை  மண்மேடுடன் கற்பாறைகள் சரிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் கடும் சேதமாகியுள்ளது.

அதே வேளை பொகவந்தலாவை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட லொயினோன் தோட்டப் பகுதியில் நேற்று (25) மதியம் மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் பகுதியளவில் சேதமாகியுள்ளது.

மண்சரிவினால் உயிராபத்துக்கள் ஏற்படாத போதிலும் உடமைகள் சேதமாகியுள்ளதுடன் சேத விபரம் தொடர்பில் பிரதேச கிராம உத்தியோகஸ்தர்கள் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கண்டி மாவட்டத்திலும்  கடும்  மழை  பெய்து  வருகின்றது. மழையுடன் காற்றும்  கடும் குளிரும் நிலவி வருகின்றன.

இதனால் மக்களின்  இயல்பு  வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதிக பனிமூட்டம் காரணமாக இருள் சூழ்ந்துள்ளது.

இதேவேளை இரத்தினபுரி மற்றும் சூழவுள்ள பிரதேசங்களில் அடை மழை பெய்து வருவதால் களுகங்கையின் நீர் மட்டம் அவதான நிலை வரை உயர்ந்துள்ளது.

இரத்தினபுரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஊற்றெடுக்கும்  களுகங்கையின் கிளை ஆறுகளான வேகங்க, தெனவக, கங்கை நிரிஎலி, கங்கை குருகங்கை ஆகிய ஆறுகள் பெருக்கெடுத்தமையினால் களுகங்கையின் நீர்மட்டம் இவ்வாறு உயர்ந்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களத்தின் இரத்தினபுரி மாவட்டக் காரியாலய அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேவேளை களுகங்கையின்  நீர் மட்டம் நேற்று  5.6 மீற்றர் வரை அதிகரித்துள்ளது. இது வெள்ள விழிப்பு நிலையையும் தாண்டி 7.5 மீற்றர் உயர்ந்தால்  வெள்ள நிலைமைக்கான அறிகுறி என  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் பொது மக்கள் அவதானமாக இருக்கவேண்டும்  எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

களுகங்கையின் பிரதான ஆறுகள் உட்பட நான்கு இடங்களில் இதன் நீர் மட்டத்தை அளவிட அளவுமானிகள் சப்ரகமுவ மாகாண சபையால் பொருத்தப்பட்டுள்ளன.இரண்டு நாட்களாக இப்பிரதேசத்தில் பெய்துவரும் மழை காரணமாக மேற்படிக் கிளையாறுகள் ஓடும் சில பிரதேசங்களின் தாழ்நிலங்கள் நேற்று நீரில் மூழ்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நோட்டன் பிரிட்ஜ் , ஹற்றன் சுழற்சி, தெல்தோட்டை தினகரன் , காவத்தை     தினகரன் , இரத்தினபுரி சுழற்சி  நிருபர்கள்

Wed, 05/26/2021 - 10:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை