கொரோனா வைரஸை கட்டுப்படுத்த பள்ளிவாசல் நிர்வாகிகள், பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்

- அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அகிலன்

கொவிட் 19 வைரஸ் பரவலின் மூன்றாவது அலையினை கட்டுப்படுத்த சுகாதாரத் துறையினர் மேற்கொண்டு வரும் செயற்பாடுகளுக்கு பள்ளிவாசல் நிர்வாகிகளும் பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். அவ்வாறு ஒத்துழைப்பு வழங்கா விட்டால் நாம் பாரியளவு மனித உயிர்களை பலிகொடுக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்படுவோம் என அட்டாளைச்சேனை பிரதேச சுகாதார வைத்திய
அதிகாரி டொக்டர் எஸ்.அகிலன் தெரிவித்தார்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கமைவாக கொவிட் 19 மூன்றாவது அலையின் பரவல் தொடர்பில் வருமுன் காப்போம் எனும் தொனிப் பொருளில் பாலமுனை பிரதேச அனைத்துப் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டும் செயலமர்வு புதன்கிழமை (5) பாலமுனை
ஜும்ஆப் பெரிய பள்ளிவாசல் மண்டபத்தில் நடைபெற்றது. அட்டாளைச்சேனை பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எச்.எம். றிபாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பள்ளிவாசல் தலைவர்கள் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் என பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

கொரோனா வைரஸ் மூன்றாவது அலை வேகமாக பரவிவரும் இக்கால சூழ்நிலையில் பொது மக்களின் பாதுகாப்பு நலன்கருதி சுகாதாரதுறையினரால் எமது பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எனவே பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி நடப்பதற்கு பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் தத்தமது பிரதேசங்களில் இருக்கின்ற மக்களுக்கு விழிப்புணர்வுகளை வழங்க வேண்டும் . கொவிட் சட்டதிட்டங்களுக்கு மாற்றமாக வணக்க வழிபாடுகளில் பொதுமக்கள் ஈடுபடுவதற்கு எக்காரணம் கொண்டும் பள்ளிவாசல்களின் நிர்வாகிகள் அனுமதிக்க வேண்டாம். அவ்வாறு அனுமதிப்பீர்கள் என்றால் நீங்கள் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படுவீர்கள் என்பதை மறக்க வேண்டாம்.

கொரோனா தொற்றை எமது பிரதேசத்தில் வராமல் தடுப்பதற்கு பள்ளிவாசல்களின் நிர்வாகிகளும் பொதுமக்களும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அவ்வாறு ஒத்துழைப்பு வழங்காவிட்டால் பாரிய மனித அழிவை சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றார்.

(பாலமுனை கிழக்கு தினகரன் நிருபர்)

Fri, 05/07/2021 - 15:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை