மும்மடங்கு நோயாளர்கள் சமூகத்தில் இருக்க வாய்ப்பு

அமைச்சர் சுதர்ஷனி எச்சரிக்கை

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் அன்றாடம் புதிதாக இனங்காணப்படுவோர் போன்று மூன்று மடங்கு நோயாளிகள் சமூகத்தில் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

அத்தகைய நோயாளர்களினால் மேலும் மேலும் நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கும் ஆபத்து நிலவுவதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே;

ஒரு நாளில் 3500 க்கும் மேற்பட்ட கொரோனா வைரஸ் தொற்று நோயாளர்கள் தற்போது இனங்காணப்பட்டு வருகின்றனர்.எனினும் அதற்கு மேலாக பல மடங்கு நோயாளர்கள் சமூகத்தில் காணப்படலாம். தினமும் 3500 பேர் புதிதாக இனங்காணப்பட்டு வரும் நிலையில் அது போன்று மூன்று மடங்கு நோயாளர்கள் சமூகத்தில் இருக்கலாம். அவர்கள் ஊடாக மேலும் அதிகமான பரவல் சமூகத்தில் இடம்பெறலாம்.

மக்களை வீட்டில் இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளபோதும் அவர் வீதிகளிலேயே நடமாடுகின்றனர். வீதிகள் வெறிச்சோட வேண்டும். அது தற்போது நடப்பதில்லை. மிக அத்தியாவசியமான காரணங்களுக்காக அன்றி மக்கள் வெளியில் நடமாட வேண்டாம் என மீண்டும் நாம் கேட்டுக்கொள்கின்றோம்.

அதை வேளை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பது தொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் சம்பந்தமாக வெளியிட்டுள்ள சுற்றறிக்கை தொடர்பில் கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே;

சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் வினைத்திறன் காணப்படுகின்றது எனினும் தன்னிச்சையாக எவரும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பது சிறந்ததல்ல.

தற்போது மக்கள் புத்திசாலிகளாக உள்ளனர். சுகாதார தகவல்களில் அவர்கள் எதை ஏற்றுக்கொள்ள வேண்டும் எதை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்ற தெளிவுடன் உள்ளனர்.

உண்மைநிலையை மறைப்பதற்கு அரசாங்கம் முயற்சிப்பதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றனவே என ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், அதில் எந்த உண்மையும் கிடையாது. வைரஸ் தொற்றை மறைக்க முற்பட்டால் நாமும் தொற்றுக்கு உள்ளாகுவோம் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Fri, 05/21/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை