காசாவில் தரைவழிப் படையெடுப்புக்கு இஸ்ரேல் தயார்: 115 பலஸ்தீனர்கள் பலி

இஸ்ரேலுக்குள் கலவரம் தொடர்கிறது

சர்வதேச அழைப்பையும் மீறி ஐந்தாவது நாளாக நேற்றைய தினத்திலும் காசா மீது இஸ்ரேல் வான் தாக்குதல் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தியது. முற்றுகையில் இருக்கும் காசா எல்லையில் இஸ்ரேலிய படைகள் மற்றும் யுத்த தாங்கிகள் குவிக்கப்பட்டுள்ளன.

காசாவின் வடக்கில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் பெண் ஒருவர் மற்றும் அவரது மூன்று மகன்கள் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

நேற்றுக் காலை வரை இஸ்ரேல் தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 115 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் குறைந்தது 31 சிறுவர்கள் உள்ளடங்குகின்றனர். இதில் குறைந்தது 600 பேர் காயமடைந்துள்ளனர்.

பலஸ்தீனர்கள் கடந்த வியாழக்கிழமை நோன்புப் பொருநாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்தபோதும் இஸ்ரேலின் உக்கிர தாக்குதல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

இதுவரை இஸ்ரேல் தரப்பில் எட்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதில் இந்திய நாட்டு பெண் ஒருவரும் உள்ளார். இஸ்ரேலின் பல்வேறு இடங்களை நோக்கி காசாவில் இருந்து நூற்றுக்கணக்கான ரொக்கொட் குண்டுகள் வீசப்பட்டு வருவதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.

மறுபுறம் இஸ்ரேலுக்குள் பல நகரங்களும் யூத இஸ்ரேலியர்கள் மற்றும் அரபு பிரஜைகளுக்கு இடையே மோதல் மற்றும் வன்முறைகள் நீடித்து வருகிறது.

இந்த மோதல்கள் ஒரு சிவில் யுத்தத்தை ஏற்படுத்தும் அச்சம் பற்றி இஸ்ரேல் ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.

உள்நாட்டு பதற்றத்தை கட்டுப்படுத்துவதற்கு மேலதிக துருப்புகள் அனுப்பப்பட்டிருப்பதாகவும் இதுவரை 400க்கும் அதிகமானவர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் பென்னி கான்ட்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்த பெரும்பாலான பிரச்சினைகளுக்கு இஸ்ரேல் அரபியரே காரணம் என்று இஸ்ரேல் பொலிஸார் குற்றம்சாட்டியபோதும் அதனை மறுக்கும் அவர்கள் யூத குண்டர்களே அரபு வீடுகள் மீது தாக்குதல் நடத்துவதாக குறிப்பிட்டுள்ளனர்.

மறுபுறம் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் ஆர்ப்பாட்டங்கள் வெடித்துள்ளன. மேற்குக் கரை நகரான அல் பிரிவின் வடக்கு பகுதியில் பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் மற்றும் இஸ்ரேல் பொலிஸார் இடையே நேற்று மோதல் ஏற்பட்டுள்ளது.

காசா மீதான தாக்குதலில் தமது தரைப்படை நேற்று பங்கேற்றதாக இஸ்ரேல் அறிவித்தபோதும் அது காசாவுக்குள் இன்னும் நுழையவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

இஸ்ரேலின் வான், தரை மற்றும் கடல் வழியான தாக்குதல்களால் காசாவின் இரவு வானம் நெருப்பு பிழம்பாக மாறி இருப்பது அங்கிருந்து வெளியாகும் வீடியோ காட்சிகளில் தெரிகிறது.

காசாவுக்கு இஸ்ரேலிய படை நுழையும் அச்சம் காரணமாக இஸ்ரேலுடனான எல்லையில் இருக்கும் பலஸ்தீனர்கள் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். இஸ்ரேலின் பீரங்கி குண்டுகள் தமது வீடுகளில் விழுவதாக காசாவின் செஜையா பகுதியில் இருந்து மக்கள் வெளியேறியுள்ளனர்.

‘அங்கே அதிக பீரங்கி குண்டுகள் விழுகின்ற. குழந்தைகள் பயப்படுகிறார்கள். பெரியவர்கள் கூட தமது சிறு வயதில் இருந்து போரை சந்திக்கிறார்கள். நாம் பயத்தில் இருக்கிறோம், இனியும் தாங் முடியாது’ என்று உம் ரயீத் அல் பக்தாதி என்பவர் ஏ.எப்.பி செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்தார்.

கடந்த வியாழக்கிழமை மேற்கொண்ட நடவடிக்கையில் ஹமாஸ் சுரங்கப்பாதை கட்டமைப்பை அழித்ததாகவும் ஆனால் தமது துருப்புகள் காசாவுக்குள் நுழையவில்லை என்றும் இஸ்ரேல் இராணுவம் கூறியது. கடந்த வியாழக்கிழமை இரவு மற்றும் வெள்ளிக்கிழமை காலை வரை காசாவில் இருந்து இஸ்ரேலை நோக்கி 220க்கும் மேல் ரொக்கட் குண்டுகள் வீசப்பட்டதாகவும் அது தெரிவித்தது.

தெற்கு இஸ்ரேலில் பாதுகாப்பான இடத்தை நோக்கி செல்லும் வழியில் ரொக்கெட் குண்டு விழுந்து 87 வயது மூதாட்டி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். அஷ்கலோன், பீர்ஷபா மற்றும் யுவ்னே ஆகிய இஸ்ரேலிய நகரங்களும் இலக்கு வைக்கப்பட்டுள்ளன.

தேவையான வரை பலஸ்தீன போராளிகள் மீதான இராணுவ நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று காலை வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமிய போராட்டக் குழுவின் ஆட்சி உள்ள காசா கடும் விளைவை சந்திக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

தரைவழி ஆக்கிரமிப்பு ஒன்றுக்கு தீர்மானித்தால் இஸ்ரேல் இராணுவத்திற்கு கடுமையான பாடம் கற்பிக்க தயாராக இருப்பதாக ஹமாஸ் பேச்சாளர் ஒருவர் எச்சரித்தார்.

2014 இற்கு பின்னர் இஸ்ரேல் மற்றும் காசாவுக்கு இடையிலான உக்கிர மோதலாக இது மாறியுள்ளது. கிழக்கு ஜெரூசலத்தில் கடந்த ஒருசில வாரமாக நீடித்த பதற்றத்தின் தொடர்ச்சியாக இந்த மோதல் வெடித்தது. முஸ்லிம்களின் புனிதத் தலமான அல் அக்ஸா பள்ளிவாசல் வளாகத்தில் இஸ்ரேல் பொலிஸார் மற்றும் பலஸ்தீன ஆர்ப்பாட்டக்காரர்கள் இடைலே மோதல் இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.

காசா எல்லை பகுதியில் கடந்த வியாழக்கிழமை இஸ்ரேலின் 7,000 மேலதிக படையினர் நிறுத்தப்பட்டதோடு அங்கு பீரங்கிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. காசா மீதான தரைவழி தாக்குதல் ஒரு தேர்வாக இருப்பதாகவும் அது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை என்றும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்தது.

நேற்று மோதல் ஐந்தாவது நாளை எட்டிய நிலையில், மோதல்களை உடன் நிறுத்தவும் காசா மற்றும் இஸ்ரேலில் தாக்குதல்களை நிறுத்தவும் ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

இஸ்ரேலின் கூட்டாளியான அமெரிக்கா மற்றும் ஏனைய இராஜதந்திரிகளும் போரை நிறுத்துவதற்கு அழைப்பு விடுத்துள்ளனர். எனினும் மோதலை கட்டுப்படுத்துவதில் அது தோல்வி அடைந்துள்ளது.

ஜெரூசலம் அல் அக்சா பள்ளிவாசலில் இஸ்ரேல் இராணுவ ஒடுக்குமுறைகளை நிறுத்துவதற்கு சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுத்தால் பரஸ்பரம் போர் நிறுத்தம் ஒன்றுக்கு தயார் என்று ஹமாஸ் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் - பலஸ்தீன மோதலின் மையமாக கிழக்கு ஜெரூசலம் உள்ளது. இந்த பகுதி தங்களுக்குத்தான் சொந்தம் என்று இரு தரப்பினரும் கூறுகின்றனர்.

1967ஆம் ஆண்டு நடந்த மத்திய கிழக்கு போருக்குப் பின் கிழக்கு ஜெரூசலம் நகரை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. 1980ஆம் ஆண்டு இஸ்ரேல் அரசு கிழக்கு ஜெரூசலத்தை தங்களுடன் இணைத்துக் கொண்டது.

ஜெரூசலம் நகரம் தங்களது தலைநகரம் என்று இஸ்ரேல் கருதுகிறது. ஆனால் சர்வதேச நாடுகள் பலவும் இதை அங்கீகரிக்கவில்லை.

எதிர்காலத்தில் அமையக் கூடும் என்று தாங்கள் நம்பும் சுதந்திர நாட்டுக்கு கிழக்கு ஜெரூசலம் தான் தலைநகராக அமையும் என்று பலஸ்தீன் கூறுகிறது.

கிழக்கு ஜெரூலத்தில் அமைந்துள்ள அல்-அக்சா பள்ளிவாசல் இஸ்லாமியர்களின் மூன்றாவது புனித தலமாகும். மலைக் குன்றின் மேல் அமைந்துள்ள இந்த இடத்தை யூதர்களும் புனிதத் தலமாக கருதுகின்றனர். அவர்கள் இதை ‘டெம்பிள் மவுன்ட்’ (கோயில் மலை) என்று அழைக்கின்றனர். தங்களின் இரண்டு விவிலிய புனித இடங்களில் ஒன்றாக யூதர்கள் இதைக் கருதுகிறார்கள்.

Sat, 05/15/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை