ஈரானின் அணு உலை வெடிப்பை பயங்கரவாத செயலாக அறிவிப்பு

ஈரான் அணு உலை ஒன்றில் புதிய யுரேனிய செறிவூட்டல் உபகரணங்கள் பொருத்தப்பட்ட ஒரு தினத்தின் பின் அந்த நிலையத்தின் மீது கடந்த ஞாயிற்றுக்கிழமை நாசகார தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்நாட்டு முன்னணி அணு அதிகாரி அலி அக்பர் சலாஹி தெரிவித்துள்ளார்.

தலைநகர் டெஹ்ரானுக்கு தெற்கே உள்ள நடான்ஸ் வளாகத்தில் மின்சாரம் செயலிழந்த இந்தச் சம்பவத்தை ‘பயங்கரவாதச் செயல்’ என குறிப்பிட்ட அவர் இதன் பின்னணியில் இருப்பவர்கள் பற்றி எதுவும் கூறவில்லை.

எனினும் இஸ்ரேலிய உளவு பிரிவின் தரப்புகளை மேற்கோள்காட்டி இஸ்ரேலிய அரச ஊடகம் வெளியிட்ட செய்தியில், இது ஒரு இஸ்ரேலிய சைபர் தாக்குதல் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் நேரடியாக எந்த பதிலும் அளிக்கவில்லை.

எனினும் ஈரானின் அணு செயற்பாடுகள் குறித்து இஸ்ரேல் அண்மைக் காலத்தில் கடும் எச்சரிக்கைகளை விடுத்து வந்தது.

2018 ஆம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகத்தில் வெளியேறிய ஈரானுடனான 2015 அணு உடன்படிக்கையை புதுப்பிக்கும் இராஜதந்திர முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் நிலையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நடான்ஸ் தளத்தில் புதிய மையநீக்கிகளை ஈரான் ஜனாதிபதி ஹசன் ரூஹானி கடந்த சனிக்கிழமை திறந்து வைத்தார். இந்த நிகழ்வு ஈரான் தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்பட்டது. யுரேனிய செறிவூட்டலுக்கு இந்த மையநீக்கி கருவிகள் அவசிமாகும். இந்த செறிவூட்டல் எரிசக்தி உருவாக்க பயன்படுவதோடு, அணு ஆயுதங்கள் உருவாக்கவும் தேவையாகும்.

எனினும் இந்த அமைப்பு ஈரான் செய்து கொண்ட 2015 அணு உடன்படிக்கையை மீறும் மற்றொரு செயலாக உள்ளது. இந்த உடன்படிக்கையின்படி வணிக மின் உற்பத்தி ஆலைகளுக்கு எரிசக்தி உற்பத்தி செய்வதற்கு செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை குறிப்பிட்ட அளவு மாத்திரமே உற்பத்தி செய்யவும் களஞ்சியப்படுத்தவும் முடியும் என்று ஈரானுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த ஞாயிறன்று நடந்த சம்பவத்தில் அணு நிலையத்தின் மின்சார வலையமைப்பு பாதிக்கப்பட்டதாக ஈரான் அணு சக்தி அமைப்பின் பேச்சாளர் பஹ்ரூஸ் கமல்வான்டி தெரிவித்திருந்தார்.

ஈரான் தலைநகர் டெஹ்ரானுக்குத் தெற்கே 200 கி.மீ. தொலைவில் பூமிக்கு அடியில் நடான்ஸ் அணு உலை மையம் அமைக்கப்பட்டுள்ளது. வானிலிருந்து ஏவுகணை தாக்குதல் நடத்தினாலும் பாதிப்பு ஏற்பட முடியாத வகையிலான பாதுகாப்பு வசதி கொண்டதாக இந்த மையம் உள்ளது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் இதே மையத்தில் மர்ம வெடிப்பு ஏற்பட்டு யுரேனியம் செறிவூட்டும் கருவிகள் பலத்த சேதமடைந்தன. அது தொடர்பான விசாரணை இன்னும் முடியாத நிலையில், தற்போது மர்மமான முறையில் மின்தடை ஏற்பட்டுள்ளது.

Tue, 04/13/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை