பாக்கு நீரிணையை கடந்து விமானப்படை வீரர் புதிய ஆசிய சாதனை

பாக்கு நீரிணையை கடந்து விமானப்படை வீரர் புதிய ஆசிய சாதனை-New Asia Record By SLAF Roshan Abeysundara Br Crossing Palk Strait

- வல்வெட்டித்துறை ஆழிக்குமரனின் 50 வருட சாதனையை கடந்தார்

இலங்கை விமானப்படையைச் சேர்ந்த முன்னணி நீச்சல் வீரரான, ரொஷான் அபேசுந்தர பாக்குநீரிணையை நீந்திக் கடந்து புதிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

நேற்றையதினம் (10) இலங்கையின், தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ்கோடி நோக்கி பாக்குநீரிணை ஊடாக நீந்திச் சென்ற அவர், அங்கிருந்து மீண்டும் இன்று (11) இலங்கை திரும்பியுள்ளார்.

இதற்காக அவர், 28 மணித்தியாலங்கள், 19 நிமிடங்கள், 43 செக்கன்களை எடுத்துக் கொண்டுள்ளதன் மூலம், புதிய ஆசிய சாதனையை நிலைநாட்டியுள்ளார்.

இதற்கு முன்னர் 1971ஆம் ஆண்டு நிலைநாட்டப்பட்ட இச்சாதனை யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஆழிக்குமரன் என அழைக்கப்படும் வி.எஸ். குமார் ஆனந்தனுக்கு உரித்தாக இருந்தது.

தென் மாகாகணத்தில் தலல்ல எனும் பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதான ரொஷான் அபேசுந்தர, இச்சாதனைக்கு தயாராகும் வகையில், கடந்த ஜனவரி 03ஆம் திகதி, மாத்தறையிலிருந்து கொக்கல வரையான 25km தூரத்தை 10 மணித். 37 நிமிடங்களில் நீந்திக் கடந்ததோடு, கடந்த பெப்ரவரி 27 ஆம் திகதி மாத்தறையிலிருந்து ஹிக்கடுவ சென்று அங்கிருந்து உணவட்டுன வரையான 49km தூரத்தை நீதிக் கடக்க 23 மணித். 10 நிமிடங்கள் எடுத்துக் கொண்டதன் மூலம் தேசிய சாதனையை இரு முறை முறியடித்துள்ளார்.

1943 ஆம் ஆண்டு (மே 25) பிறந்த, 'ஆழிக்குமரன்' என அழைக்கப்படும் செல்வக்குமார் ஆனந்தன், ஈழத்தின் நீச்சல் வீரரும்,வழக்கறிஞரும் ஆவார். அவர் 1971ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து பாக்குநீரிணை ஊடாக இந்தியா சென்று, மீண்டும் இலங்கை திரும்புவதற்கு 51 மணித்தியாலங்கள் எடுத்திருந்தார்.

அவரது 50 வருடங்களாக முறியடிக்கப்படாத சாதனையே இன்று முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒன்பது கின்னஸ் சாதனைகள் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை படைத்துள்ள ஆழிக்குமரன், இறுதியாக 1984ஆம் ஆண்டு (1984.08.06) ஆங்கிலக் கால்வாயை கடந்து சாதனை படைக்க எடுத்த முயற்சியின்போது உயிரிழந்தார்.

ஆழிக்குமரனின் கின்னஸ் உலக சாதனைகள்:

  1. பாக்கு நீரிணையை 51 மணி நேரத்தில் நீந்தி கடந்தது.(1971-ம் ஆண்டு)
  2. 128 மணி நேரம் தொடர்ச்சியாக "டிவிஸ்ட்"நடனம் ஆடியது(1978)
  3. 1,487 மைல் தூரத்தை 187 மணி நேத்தில் இரு சக்கர வாகனத்தில் கடந்தது(1979)
  4. 33 மணி நேரம் ஒற்றை காலில் நின்றது.(1979)
  5. 136 மணி நேரம் Ball punching செய்தது.(1979)
  6. இரண்டு நிமிடத்தில் 165 தடவை site up செய்தது.
  7. 9,100 தடவை high kicks செய்தது(1980)
  8. நடந்தே 296 மைல் தூரத்தை 159 மணி நேரத்தில் கடந்தது.(1981)
  9. 80 மணி நேரம் தொடர்ச்சியாக தண்ணீரில் செங்குத்தாக நின்றது
Sun, 04/11/2021 - 14:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை