நேற்று முதல் ரூ. 1,000 பொதி ச.தொ.ச.வில்

12 அத்தியாவசிய பொருட்கள் அடக்கம்

தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு சலுகை விலையில் பொது மக்களுக்கு  அத்தியாவசியப் பொருட்களை பெற்றுக்கொடுக்கும் நோக்குடன் 12 அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய ‘சதொச சலுகை பொதி’ 1,000 ரூபாவுக்கு நேற்று ஏப்ரல் 01ஆம் திகதிமுதல் நாடு முழுவதுமுள்ள சதொச விற்பனை நிலையங்களின் ஊடாக வழங்கப்படுவதாக வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

வர்த்தக அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

‘சதொச சலுகை பொதி’ யில் 01 கிலோ வெள்ளை பச்சை அரிசி, 01 கிலோ சிவப்பு பச்சை அரிசி, 01 கிலோ நாட்டரிசி, 01 கிலோ வெள்ளை சீனி, 01 கிலோ பருப்பு, 01 கிலோ கோதுமை மா, உப்பு ஒரு பக்கட், 250 கிராம் நெத்தலி, மிளகாய் ஒரு பக்கட், சோயாமீட் ஒரு பக்கட், தேயிலைத்தூள் ஒரு பக்கட் மற்றும் முகக்கவசமும் இந்த பொதியில் அடங்கும்.

கொவிட்19 தொற்று காரணமாக உலகளாவிய ரீதியில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் உயர்ந்துள்ள போதிலும், பொதுமக்களைப் பாதுகாப்பதற்கும், நுகர்வோருக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்குவதற்கும் அனைத்து நடவடிக்கைகளையும் தற்போதைய அரசாங்கம் எடுத்துள்ளது. அதற்காகவே இதுபோன்ற ஒரு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

கடந்தாண்டுகளுடன் ஒப்பிடுகையில் இந்தமுறை பண்டிகை காலங்களில் பொருட்களின் விலையில் அதிகரிப்பு இருக்காது. மக்களின் வாழ்க்கைச் செலவு உயர்ந்துள்ள நேரத்தில் இதுபோன்ற நிவாரணப் பொதியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 190 ரூபாயாக இருந்த 01 கிலோ பருப்பின் விலை இப்போது 180 ரூபாவாகும். பால்மாவின் விலை 385 ரூபாவாகவிருந்த நிலையில் தற்போது 355 ரூபாவாகும். அதேபோன்று 01 கிலோ உருளைக்கிழங்கு 150 ரூபாவுக்கும் 01 கிலோ பெரிய வெங்காயம் 70 ரூபாய்க்கும் சதொசவில் வழங்கப்படுகிறது. புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தப்பின்னர் வீழ்ச்சியடைந்திருந்த தனிநபர் வருமானத்தை மீண்டும் அதிகரிக்க முடிந்துள்ளது என்றார்.

சுப்பிரமணியம் நிஷாந்தன்

Fri, 04/02/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை