சுயஸ் கால்வாய்க்கு குறுக்காக நிற்கும் கப்பலை விடுவிக்க கடும் போராட்டம்

நெரிசல் அதிகரிப்பு: எண்ணெய் விலையிலும் தாக்கம்

சுயஸ் கால்வாயில் குறுக்காக சிக்கி சரக்குக் கப்பல்களின் போக்குவரத்திற்கு நெரிசலை ஏற்படுத்தி இருக்கும் இராட்சத கொள்கலன் கப்பலை விடுவிப்பதற்கு இழுவை படகுகள் நேற்று கடுமையாக போராடின.

400 மிற்றர் நீளம் கொண்ட பனாமா கொடியுடனான எம்.வி எவர் கிவன் என்ற இந்தக் கப்பல் கடந்த செவ்வாய்க்கிழமை மணல் புயலில் சிக்கி கட்டுப்பாட்டை இழந்திருக்கும் நிலையில் அதனை மீண்டும் மிதக்கவிட முயற்சித்து வருவதாக சுயஸ் கால்வாய் நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.

கப்பலை மீட்டெடுத்து நிலைமையை சரிசெய்ய தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும், கப்பல் மோதியிருக்கும் கால்வாயின் இரண்டு பகுதிகளிலும் தோண்டி மணலை அப்புறப்படுத்தி மீட்டெடுக்க திட்டமிட்டிருப்பதாகவும் சுயஸ் நிர்வாகம் மேலும் கூறி உள்ளது.

குறிப்பாக சுயஸ் கால்வாயில் நீர்மட்டம் குறைந்ததால், குறுக்கே நிற்கும் பெரிய சரக்குக் கப்பலின் மீட்புப் பணிகள் மெதுவடைந்துள்ளன.

கப்பலை ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், காற்று, கப்பலின் பெரிய அளவு ஆகிய காரணங்களால் அதிக முன்னேற்றம் இல்லை எனக் கடல்துறை சேவைகள் வழங்கும் ஜி.ஏ.சி நிறுவனம் கூறியது.

59 மீற்றர் அகலம் கொண்ட இந்த கொள்கலன் கப்பல் ஒட்டுமொத்த கால்வாய் பாதையையும் மறைக்கும் வகையில் குறுக்காக சிக்கி இருக்கும் செய்மதி படங்கள் வெளியாகியுள்ளன.

“இதற்கு முன்னர் நாம் இப்படி ஒன்றை பார்த்ததில்லை” என்று மத்திய கிழக்கு எண்ணெய் மற்றும் கப்பல்கள் தொடர்பான ஆய்வாளர் ரஞ்சித் ராஜா தெரிவித்துள்ளார்.

இந்தத் தடங்கல் ஏற்கனவே உலக எண்ணெய் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்த ஆரம்பித்துள்ளது. விநியோகத்தில் ஏற்பட்டிருக்கும் தாமதத்தால் மசகு எண்ணெய் விலை கடந்த புதனன்று ஆறு வீதம் உயர்ந்துள்ளது.

இந்த கப்பலை இழுவைப் படகுகளால் நகர்த்த முடியாமல்போனால், கப்பலில் இருக்கும் சில சரக்குகள் கிரேன் மூலம் அகற்ற வேண்டி ஏற்படும் என்று ப்ரீமர் கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இதற்கு பல நாட்கள், சிலவேளை வாரங்கள் எடுத்துக் கொள்ளலாம்” என்றும் அது எச்சரித்துள்ளது.

இந்நிலையில் குறுக்காக இருக்கும் இந்தக் கப்பலின் இரு பக்கங்களிலும் முன்னேறிச் செல்ல முடியாமல் பெரும் எண்ணிக்கையான கப்பல்கள் காத்திருப்பதாக கடல்போக்குவரத்து தொடர்பான வரைபடம் ஒன்று காட்டுகிறது.

அடுத்த 2 நாட்களுக்குள் போக்குவரத்து சீர் செய்யப்படவில்லை என்றால், சில கப்பல்கள் வேறு அதிக தூரம் கொண்ட வழியில் திசை திரும்பிச் செல்ல வேண்டியிருக்கும் என்று கப்பல் நிபுணர்கள் சிலர் தெரிவித்தனர்.

இதற்கிடையில், குறுக்கே நிற்கும் கப்பலின் உரிமையாளரும் காப்பீட்டாளர்களும் பல மில்லியன் டொலர் இழப்பீட்டை எதிர்நோக்கலாம் என்று கூறப்படுகிறது.

வருவாய் இழப்பு, தவறவிடப்பட்ட விநியோகக் காலக்கெடு, பொருட்கள் வீணாகுவது ஆகிய காரணங்களுக்காக நெரிசலில் சிக்கியுள்ள கப்பல்கள் இழப்பீடு கோரத் ஆரம்பித்துள்ள.

இந்த நீர்ப்பாதை ஆசிய மற்றும் ஐரோப்பாவுக்கு இடையிலான பயணத் தூரத்தை பெருமளவு குறைக்கிறது. ஆசியாவில் இருந்து வரும் அனைத்துக் கப்பல்களும் இந்த கால்வாய் ஊடாக பயணிப்பதால் இது தீர்க்கமான பாதையாக உள்ளது என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டில் சுயஸ் கால்வாய் வழியாக ஒரு பில்லியன் தொன்னுக்கும் அதிகமான சரக்குகளை சுமந்து சுமார் 19,000 கப்பல்கள் பயணித்துள்ளன. இதன்மூலம் எகிப்து 5.61 பில்லியன் டொலர் வருவாயை ஈட்டியுள்ளது.

1869ஆம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட இந்த சுயஸ் கால்வாய், 193 கி.மீ. நீளமும், 24 மீ. ஆழமும், 205 மீ. அகலமும் கொண்டது. எகிப்தின் வருவாயில் மிகப்பெரிய பங்களிப்பை செய்துவரும் இந்தக் கால்வாயிலிருந்து, வருவாயை பெருக்கும் நோக்கில் எகிப்து அரசு 2015ஆம் ஆண்டு பெரிய கப்பல்கள் பயணிக்கும் வகையில் கால்வாயை விரிவாக்கம் செய்தமை குறிப்பிடத்தக்கது.

Fri, 03/26/2021 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை