காணி அளவீடுகளை மேற்கொள்ள நவீன தொழில்நுட்ப நடமாடும் சேவை

காணி அளவீடுகளை விரைவுபடுத்தவும் அவற்றை ஒழுங்குபடுத்தும் நோக்கிலும் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடமாடும் சேவையை நாடு முழுவதும் முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காணி அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் (24) நடைபெற்ற காணி விவகாரங்கள் தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக்குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வைத்த யோசனைகளுக்கு பதில் வழங்கும் வகையிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். விசேடமாக காணிகளை அளவிடும் செயற்பாடுகள் ஒழுங்கான முறையில் முன்னெடுக்கப்படுவதில்லையென்பதுடன், இதனால் நீண்ட காலதாமதம் ஏற்படுகிறது. இதனை ஒழுங்குபடுத்தும் நோக்கில் நடமாடும் சேவையொன்றை நாடு முழுவதும் முன்னெடுப்பது பொருத்தமானது என இக்குழுவில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் யோசனை முன்வைத்தனர். இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த காணி அமைச்சின் அதிகாரிகள், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடமாடும்
சேவையொன்று பரீட்சார்த்தமாக திறப்பணே பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறினர். அத்துடன், ‘பிம் சவிய’ காணிகளை பிழையற்ற முறையில் அளவீடு செய்து விரைவில் அவற்றுக்கான காணி உரிமைப் பத்திரங்களை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்துமாறு இக்கூட்டத்தில் கலந்துகொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர். இவ்வாறான காணிகளில் உள்ள பொது மக்கள் வங்கிகளில் கடன்களைப்பெறும்போது கூட பல்வேறு சிக்கல்களுக்கு முகங்கொடுப்பதாகவும், 15-20 வருடங்களாக இந்தப் பிரச்சினைகளுக்கு மக்கள் முகம்கொடுத்து வருவதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.

Sat, 03/27/2021 - 13:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை