சட்டவிரோத மணல் அகழ்வு; கட்டுப்படுத்த நடவடிக்கை

- மட்டு. கிரான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டவிரோத மணல் அகழ்வைக் கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக வாகனேரி பிரிவிலுள்ள புணானை அணைக்கட்டிலிருந்து பொண்டுகள் சேனை பாலத்தை அண்மித்த இடத்தில் மணல் அகழ்வு முழுமையாக நிறுத்தப்படவுள்ளது.

மட்டக்களப்பு கிரான் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தலைமையில் பிரதேச செயலக மண்டபத்தில் நேற்றுமுன்தினம் (04) இக்கூட்டம் நடைபெற்றது. பிரதேச செயலாளர் ராஜ்பாபுவின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சாணக்கியன், கோவிந்தன் கருணாகரன், வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சோபா ஜெயரன்ஜித் மற்றும் அரச, அரச சார்பற்ற நிறுவனங்கள், திணைக்களின் தலைவர்கள், பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் நடைபெறும் இப்பிரதேசத்திற்கான முதலாவது கூட்டம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

இக்கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு ஆராயப்பட்டபோதிலும், மணல் அகழ்வினால் வயற்பகுதியிலுள்ள பாலங்கள் மற்றும் மதகுகள் உடைந்துவிழும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், விவசாய நிலங்கள் மற்றும் பாதைகள் தோண்டப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

இதையடுத்து மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நிலையிலுள்ள பிரதேசங்களில் மணல் அகழ்வை உடனடியாக முழுமையாக நிறுத்தி மீள்பரிசீலனைக்குட்படுத்த இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

(ஏறாவூர் நிருபர்)

Sat, 03/06/2021 - 18:20


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை