மாகாண சபை தேர்தலை நடத்தும் தீர்மானம்; எந்தவித அழுத்தத்துக்கும் அடிபணிந்த முடிவல்ல

- ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய தெரிவிப்பு

எந்த நாட்டின் அழுத்தங்களுக்கு மத்தியிலும்  மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் முடிவும் எடுக்கவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும், தகவல் ஊடகத்துறை அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 

ஜெனீவாவில் மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் நடைபெறுகின்றது. இந்த விடயத்திற்கும் மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கும் எந்தவித தொடர்பும் இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்தார். 

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது. இதன் போது ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளித்தார். 

முன்னைய அரசாங்கத்தினால் மாகாண சபை தேர்தல் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட பிரேரணையின் போது அது காலவரையறை இன்றி ஒத்திவைக்கப்பட்டது. 

இதனால் மாகாண சபை தேர்தல் நடைபெறுவதில் ஏற்பட்ட சட்ட ரீதியிலான தடைகளை நீக்குவதற்காக அரசாங்கம் தற்பொழுது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மாகாண சபை எமது அரசியல் யாப்பில் 13ஆவது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.யாரின் அழுத்தத்திற்கும் அடிபணிந்து தேர்தலை நடத்தப் போவதில்லை என்றும் அவர் கூறினார். 

குறைகளை நிவர்த்தி செய்து மக்களின் உரிமைகளை பாதுகாக்கவும் நாட்டின் பிரதான சட்டங்களை பாதுகாக்கவும் நடவடிக்கை எடுப்பதாக கூறிய அவர் எந்த நாட்டின் அழுத்தத்திற்காகவும் மாகாண சபை தேர்தலை நடத்த எந்த முயற்சிகளும் இல்லை என்றும் குறிப்பிட்டார். 

தேவையான சட்டங்களை சமர்ப்பித்து தவறுகளை சரிசெய்ய இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். 

ஷம்ஸ் பாஹிம்

Wed, 03/17/2021 - 09:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை