மியன்மாரில் ஒரே நாளில் 91 ஆர்ப்பாட்டக்காரர் பலி

பல நாடுகளும் கண்டனம்

மியன்மாரில் இராணுவ சதிப்புரட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் கடந்த சனிக்கிழமை சிறுவர்கள் உட்பட குறைந்து 91 பேர் கொல்லப்பட்டதற்கு எதிராக பல நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மியன்மாரில் இராணுவம் ஆட்சியை கைப்பற்றி அந்நாட்டு சிவில் அரச தலைவியான ஆங் சான் சூச்சி கைது செய்யப்பட்டது தொடக்கம் பதற்ற சூழல் நீடித்து வருகிறது. நாட்டில் மீண்டும் ஜனநாயகத்தை கொண்டுவரக் கோரி தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.

இதில் வருடாந்த பாதுகாப்புப் படை தினமான கடந்த சனிக்கிழமை இராணுவம் ஆர்ப்பாட்டக்காரர்களை ஒடுக்குவதில் முன்னரை விடவும் தீவிரம் காட்டி இருந்தது.

இதற்கு எதிராக அமெரிக்கா, பிரிட்டன், ஜப்பான் மற்றும் அவுஸ்திரேலியா உட்பட 12 நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் மியன்மார் இராணுவத்திற்கு கண்டத்தை வெளியிட்டுள்ளன.

“தொழில்முறையான இராணுவம் ஒன்று சர்வதேச தரத்தில் செயற்பட வேண்டும் என்பதோடு தாம் பணியாற்றும் மக்களுக்கு தீங்கு விளைவிப்பதற்கு பதில் பாதுகாப்பதற்கே பொறுப்பாக இருக்க வேண்டும்” என்று கூட்டாக வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் தமது வீட்டில் இருந்த 13 வயது சிறுமி ஒருவரும் இராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் கொல்லப்பட்டிலுப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

“நாம் எமது வீட்டுக்குள் இருந்தபோதும் கூட அவர்கள் எம்மை குருவிகள் அல்லது கோழிகள் போல் சுட்டுத்தள்ளினார்கள்” என்று மத்திய நகரான மியிங்கியானில் வசிக்கும் து யா சோவ் என்ற குடியிருப்பாளர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். தற்போதைய வன்முறையுடன் மியன்மாரில் கொல்லப்பட்ட ஆர்ப்பாட்டக்காரர்களின் எண்ணிக்கை 400ஐ தாண்டியுள்ளது.

Mon, 03/29/2021 - 08:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை