இந்தோனேசியாவில் பஸ் வண்டி பள்ளத்தில் கவிழ்ந்து 27 பேர் பலி

இந்தோனேசியாவில் சுற்றுலாப் பஸ் ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு ஜாவா மாகாணத்தின் சுபங் நகரத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் தாசிக்மாலயா மாவட்டத்தில் உள்ள புனித தலத்துக்கு சுற்றுலா சென்று விட்டு பஸ்ஸில் ஊர் திரும்பியுள்ளனர். அப்போது, சுமேதங் மாவட்டத்தில் அவர்கள் வந்த பஸ் கடந்த புதன்கிழமை இரவு கட்டுப்பாட்டை இழந்து 20 மீற்றர் ஆழம் கொண்ட பள்ளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த கோர சம்பவத்தில், பஸ் ஓட்டுநர் உட்பட 27 பேர் உயிரிழந்தனர். 39 பேர் காயமடைந்தனர். அவர்களில் 13 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து அனைத்து உடல்களும் மீட்கப்பட்டுள்ளன. காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

முதல் கட்ட விசாரணையில் பஸ்ஸின் பிரேக் செயலிழந்ததையடுத்து இந்த விபத்து நிகழ்ந்துள்ளது தெரியவந்தது. இந்த சம்பவத்துக்கான காரணம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2019 டிசம்பரில் 80 மீற்றர் ஆழத்தில் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 35 பேர் பலியாகினர். அதற்கு முன் 2018இல் மேற்கு ஜாவா மலைப் பிரதேசத்தில் சுற்றுலா பஸ் விபத்தில் சிக்கியதில் 27 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Sat, 03/13/2021 - 10:06


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை