Header Ads

அமெரிக்க ஜனாதிபதியான முதல் நாளில் டிரம்ப்பின் திட்டங்களை மாற்றும் ஆணையில் பைடன் கையெழுத்து

அமெரிக்க ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்ற விரைவிலேயே பதவியில் இருந்து வெளியேறும் டொனால்ட் டிரம்ப் காலத்தின் திட்டங்கள் பலதையும் மாற்றி அமைக்கும் நிர்வாக ஆணைகளில் கையெழுத்திட்டுள்ளார். 

இதன்படி கடந்த புதன்கிழமை ஜனாதிபதியாக முதல் நாளிலேயே பைடன் 15ஆணைகளில் கையெழுத்திட்டார். “நாம் முகம்கொடுக்கும் பிரச்சினைகளை கையாளும்போது வீணடிப்பதற்கு நேரமில்லை” என்று ட்விட்டரில் பைடன் குறிப்பிட்டுள்ளார்.  

இதில் கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை அதிகரிப்பதில் அதிகம் அவதானம் செலுத்தப்பட்டது. டிரம்ப் நிர்வாகத்தின் காலநிலை மாற்றம் மற்றும் குடியேற்ற விவகாரம் தொடர்பான கொள்கைகளை மாற்றியமைப்பதற்கு பைடன் ஆணை பிறப்பித்துள்ளார்.  

அமெரிக்காவின் பாராளுமன்றக் கட்டடத்திற்கு முன் அந்நாட்டின் 46ஆவது ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட பின்னரே பைடன் வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலகத்தில் தனது பணியை ஆரம்பித்தார்.  

கொரோனா தொற்று காரணமாக பதவியேற்பு நிகழ்வு வழக்கத்திற்கு மாறானதாக இருந்தது. இதில் மட்டுப்படுத்தப்பட்டவர்களே பங்கேற்றிருந்தனர்.  

பைடனின் வெற்றியை இன்னும் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளாத டொனால் டிரம்ப் இந்த பதவி ஏற்பு நிகழ்வை தவிர்த்துக் கொண்டு வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறினார். நீதியரசர் ஜோன் ரொபர்ட்ஸ் முன்னிலையில் பதவியேற்றுக்கொண்ட பின்னர் உரையாற்றிய பைடன், “ஜனநாயகம் மேலோங்கியுள்ளது” என்று குறிப்பிட்டார்.  

டிரம்ப் நிர்வாகத்தில் கடந்த ஆண்டுகளில் நீடித்த கொந்தளிப்புக்குப் பின் ஒற்றுமை பற்றியே பைடன் தனது உரையில் பெரிதும் வலியுறுத்தி இருந்தார். தமக்கு எதிராக வாக்களித்தவர்கள் உட்பட தாம் அனைத்து அமெரிக்கர்களுக்குமான ஜனாதிபதியாக இருப்பேன் என்று அவர் வாக்குறுதி அளித்தார்.  

இதன்போது கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றார். இந்தப் பதவியை ஏற்கும் முதல் பெண் மற்றும் கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்கர் என அவர் பதிவானார். 

அமெரிக்க பாராளுமன்றம் அமைந்திருக்கும் கெப்பிட்டல் கட்டடத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் கடந்த ஜனவரி 6ஆம் திகதி அத்துமீறி நுழைந்து கலகத்தில் ஈடுபட்ட நிலையில் பதவி ஏற்பு நிகழ்வை ஒட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.  

இதனைத் தொடர்ந்து ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் டப் எம்ஹோப் உடன் இணைந்து பைடன் மற்றும் முதல் பெண்மணி ஜில் பைடன் பென்சில்வேனியா ஒழுங்கையில் நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களின் வாழ்த்துகளுடன் வெள்ளை மாளிகைக்கு சென்றனர்.  

பைடனின் ஆணைகள் 

இதனைத் தொடர்ந்தே நிர்வாக ஆணைகளில் பைடன் கையெழுத்திட்டார். “டிரம்ப் நிர்வாகத்தின் மோசமான பாதிப்புகளை மாற்றுவது மாத்திரம் அல்ல எமது நாட்டை முன்னெடுத்துச் செல்லும் பணியும் ஆரம்பிக்கப்படுகிறது” என்று இந்த ஆணைகள் தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.  

அமெரிக்காவில் 400,000க்கும் அதிகமான உயிர்களை காவுகொண்ட கொரோனா பெருந்தொற்றை கையாள்வது தொடர்பில் தீவிரமான நடவடிக்கைகளுக்கும் பைடனின் ஆணைகள் வழிவகுக்கின்றன.  

மத்திய அரசின் அனைத்து இடங்களிலும் முகக்கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை பேணுவது இதன்மூலம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  

பெருந்தொற்றை கையாள்வது தொடர்பில் புதிய ஒருங்கிணைப்பு அலுவலகம் ஒன்று அமைக்கப்படுவதோடு உலக சுகாதார அமைப்பில் இருந்து வெளியேறுவதற்கு டிரம்ப் நிர்வாகம் மேற்கொண்டு வந்த செயற்பாடுகள் நிறுத்தப்படவுள்ளன.   

உலக சுகாதார அமைப்பில் அமெரிக்கா மீண்டும் இணைவதை ஐ.நா செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டரஸ் வரவேற்றுள்ளார். சர்வதேச அளவில் ஒருங்கிணைந்த செயற்பாடு மிகத் தீர்க்கமானதாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.  

காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகளுக்கு தமது நிர்வாகம் முன்னுரிமை அளிக்கும் என்றும் பைடன் தெரிவித்தார்.  

கடந்த ஆண்டு டிரம்ப் நிர்வாகத்தில் அமெரிக்கா உத்தியோகபூர்வமாக விலகிய 2015பாரிஸ் காலநிலை உடன்படிக்கையில் மீண்டும் இணையும் நடைமுறைகளை ஆரம்பிக்கும் நிர்வாக ஆணையிலும் பைடன் கையெழுத்திட்டார்.  

அமெரிக்காவில் எல்லைச் சுவர் எழுப்புவதற்கு நிதி சேகரிப்பதற்காக டிரம்பின் அவசர ஆணை ரத்துச் செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று சில முஸ்லிம் பெரும்பான்மை நாடுகள் மீது டிரம்ப் கொண்டுவந்த பயணத் தடையும் நீக்கப்பட்டுள்ளது.    

Fri, 01/22/2021 - 09:02


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.