ஹொங்கொங் குடியிருப்பாளர்களுக்கு பிரிட்டனின் சிறப்பு 'விசா' அறிமுகம்

300,000 மக்கள் வெளியேற வாய்ப்பு

ஹொங்கொங்கை சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கும் புதிய திட்டத்தை பிரிட்டன் வரும் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பிக்கவிருக்கும் நிலையில் அதனைக் கொண்டு சுமார் 300,000 பேர் வரை அந்த நகரை விட்டு வெளியேறுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஹொங்கொங்கின் பிரிட்டன் நாட்டு கடவுச்சீட்டை கொண்டவர்கள் மற்றும் அவர்களின் நேரடி உறவினர்களுக்கு திறன்பேசி செயலி ஒன்றை பயன்படுத்தி பிரிட்டன் விசாவுக்கு விண்ணப்பிக்க வசதி செய்துகொடுக்கப்படவுள்ளது.

முன்னாள் பிரிட்டன் காலனியுடன் வரலாற்று பிணைப்பு மற்றும் நட்பை கௌரவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.

ஹொங்கொங்கில் சீனா புதிய பாதுகாப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதை அடுத்தே இந்த புதிய விசா நடைமுறை அறிவிக்கப்பட்டது.

இதனை உள்நாட்டு விவகாரத்தில் தலையிடும் செயல் என்று சீனா முன்னதாக பிரிட்டனை எச்சரித்திருந்தது. இந்த விசாவை பெறுபவர்கள் ஐந்து ஆண்டுகளின் பின் பிரிட்டனில் குடியிருக்க விண்ணப்பிக்க முடியும் என்பதோடு மேலும் 12 மாதங்களில் அவர்களுக்கு பிரிட்டன் குடியுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி பிரிட்டனில் குடியேற 2.9 மில்லியன் பேர் மற்றும் அவர்களில் தங்கியிருக்கும் 2.3 மில்லியன் பேர் தகுதி பெறுவதோடு இந்த வாய்ப்பை சுமார் 300,000 பேர் பயன்படுத்திக் கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிரிட்டன் காலனித்துவ பகுதியாக இருந்த ஹொங்கொங் 1997 ஆம் ஆண்டு சீனாவிடம் கையளிக்கப்பட்டது.

Sat, 01/30/2021 - 13:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை