Header Ads

வெளிநாட்டிலுள்ள பணியாளர்களை தொடர்ந்து அழைத்து வர பணிப்பு

ஜனாதிபதி செயலணியுடன் கலந்துரையாடி பிரதமர் ஏற்பாடு

22,483 பேர் நாடு திரும்புவதற்கு காத்திருப்பு

நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ள வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (26) அறிவுறுத்தியுள்ளார்.

வெளிநாட்டில் பணிபுரியும் இலங்கையரை நாட்டுக்கு அழைத்து வருவது தொடர்பில் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டில் பணிபுரியும் ஏராளமான இலங்கையர் நாட்டிற்கு திரும்புவதற்கு முடியாமல் தவிப்பதாக இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண சுட்டிக்காட்டினார்.

அதற்கமைய கொவிட்-19 தொற்றை கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணியுடன் கலந்துரையாடி இவர்களை விரைவில் நாட்டிற்கு அழைத்து வருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென பிரதமர் நம்பிக்கை வெளியிட்டார்.

இவர்களை அழைத்து வரும் பயணிகள் விமானங்களுக்கான அனுமதியை பெற்றுக்கொடுத்தல் மற்றும் அவர்களுக்கு பி.சீ.ஆர். பரிசோதனைகளை மேற்கொள்ளல் தொடர்பிலும் இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டது.

இவ்வாறு அழைத்து வரப்படுபவர்களை தத்தமது இல்லங்களின் இடவசதிக்கேற்ப தனிமைப்படுத்தல் நடவடிக்கையில் ஈடுபடுத்துவதற்கான அனுமதியை பெறமுடியுமா? என்பது குறித்தும் ஜனாதிபதி செயலணியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுமென்றும் பிரதமர் குறிப்பிட்டார்.

இதுவரை வெளிநாட்டில் பணியாற்றும் 32,000 இலங்கையர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதுடன், மேலும் 22,483 பேர் தமது சொந்த நாட்டிற்கு வருகை தருவதற்கு எதிர்பார்த்துள்ளனர். தனிமைப்படுத்தல் நிலையங்களின் இடவசதியை கருத்திற்கொண்டு இதுவரை அவர்களுக்கு நாட்டிற்கு வருவதற்கான விமான சேவை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதாக ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர் அசோக் பதிரகே தெரிவித்தார்.

இச்சந்திப்பின் போது இராஜாங்க அமைச்சர் பிரியங்கர ஜயரட்ண, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி யோஷித ராஜபக்ஷ, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கமல் ரத்வத்தே, ஸ்ரீலங்கன் விமான சேவையின் தலைவர் அசோக் பதிரகே உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Thu, 01/28/2021 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.