ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணையுங்கள்

- ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கு கபீர் ஹாசிம் அழைப்பு

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினரை ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு முன்னாள் அமைச்சரும் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினருமான கபீர் ஹாசிம் அழைப்பு விடுத்துள்ளார்.

நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் எதிர்காலத்தில் பெருமளவிலானவர்கள் இணைந்து செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ள அவர் அதற்கு மேலும் பலம் சேர்க்கும் வகையில் தமது கட்சியுடன் இணைந்து செயற்பட வருமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

மாவனல்லை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எந்த முக்கியத்துவமும் இல்லாத அமைச்சுப்பதவிகளை வழங்கியுள்ளதுடன் எஸ்.பி.திஸாநாயக்க போன்றவர்களுக்கு அமைச்சுப் பதவிகளே வழங்கப்படவில்லை அக்கட்சியினர் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்பதாகவும் கபீர் ஹாசிம் சுட்டிக்காட்டியுள்ளார். அவ்வாறான அவமதிப்புகளுக்கு உள்ளாகாமல் நாட்டில் முக்கியமான எதிர்க்கட்சியான தமது கட்சியுடன் இணைந்து அவர்கள் தமது கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ள முன்வருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாட்டு மக்களின் நன்மதிப்பை பெற்ற எதிர்க்கட்சியாக ஒரு பொதுமேடை உருவாக்கப்படவுள்ளதாகவும் சஜித் பிரேமதாசவின் தலைமையிலான அந்த அணியில் இணைந்து கொள்ளுமாறும் அவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் கடந்த தேர்தல் காலங்களிலும் தேர்தல் மேடைகளில் 'கூ'அடித்து அவமதிக்கப்பட்டனர்.

தேர்தலுக்குப் பின்னரும் அதனை விட மோசமாக அவமதிக்கப்படுகின்றனர்.

அவர்கள் எம்முடன் சேர்ந்து அவர்களது கௌரவத்தை பாதுகாத்துக்கொள்ள முடியும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (ஸ)

லோரன்ஸ் செல்வநாயகம்

Mon, 01/04/2021 - 16:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை