Header Ads

கொவிட்-19: கட்டுப்பாடுகளுக்கு இடையே உலகெங்கும் புத்தாண்டுக் கொண்டாட்டம்

கொரோனா தொற்று பரவல் அதிகரிப்பால் பல நாடுகளும் முடக்க நிலையை கொண்டுவந்த சூழலில் உலகெங்கும் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.

சிட்னி தொடக்கம் நியூயோர்க் வரை வாணவேடிக்கை மற்றும் மக்கள் ஒன்றுகூடல்கள் ரத்துச் செய்யப்பட்டிருந்தன.

கொரோனா தொற்றின் புதிய திரிபு ஒன்று வேகமாக பரவும் சூழலில் ஐரோப்பிய நாடுகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பெரும்பாலும் அமைதியாகவே இடம்பெற்றன.

புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளை கட்டுப்படுத்துவதற்கும் இரவு நேர ஊரடங்களை கடைப்பிடிப்பதற்காகவும் பிரான்ஸில் 100,000 பொலிஸார் பணியமர்த்தப்பட்டிருந்தனர்.

ஓர் ஆண்டுக்கு முன் கொரோனா பெருந்தொற்று ஆரம்பித்தது தொடக்கம் இதுவரை உலகெங்கும் 1.8 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர். 81 மில்லியனுக்கும் அதிகமான நோய்த் தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பிரான்ஸ் நகர்ப்புறங்களில் வியாழக்கிழமை இரவு ஊரடங்கு நேரம் ஆரம்பமான உடன் பொலிஸார் வீதியோரங்களில் நிலைநிறுத்தப்பட்டனர். தலைநகர் பாரிசின் பாதி அளவான ரயில் சேவைகள் மூடப்பட்டன.

புத்தாண்டிலும் பிரான்ஸில் மதுபானக் கடைகள், உணவகங்கள் மற்றும் கலாசாரத் தலங்கள் மூடப்பட்டிருந்தன.

இங்கிலாந்தில் புதிய கொரோனா வைரஸ் திரிபு வேகமாக பரவி வருகின்ற சூழலில் அதனால் மோசமாக பாதிக்கப்பட்ட பிராந்தியங்களில் வசிக்கும் 20 மில்லியன் மக்கள் தமது வீடுகளில் தங்கியிருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

புத்தாண்டு இரவில் லண்டன் வீதிகள் வெறிச்சோடி இருந்ததோடு மக்கள் தமது வீடுகளிலேயே புத்தாண்டை கொண்டாடும்படி பொலிஸார் அறிவுறுத்தி இருந்தனர். எனினும் லண்டன் ஐயில் வழக்கமான வாணவேடிக்கைகள் இடம்பெற்றதோடு தலைநகரில் ஏனைய பகுதிகளிலும் அவ்வாறான வாணவேடிக்கை நிகழ்வுகள் இடம்பெற்றன. அயர்லாந்திலும் முடக்கநிலை கடைப்பிடிப்பதால் புத்தாண்டு கொண்டாட்டங்கள் சோபை இழந்திருந்தது.

ஜெர்மனியிலும் ஜனவரி 10 ஆம் திகதி வரை முடக்க நிலை அமுலில் உள்ளது. கடும் கட்டுப்பாடு இருக்கும் பகுதிகளில் பட்டாசுகள் விற்பதற்கு அரசு தடை விதித்ததோடு மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையானவர்கள் பொது இடங்களில் கூட அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மறுபுறம் இத்தாலியிலும் இரவு பத்து மணிக்கு ஊரடங்கு அமுலுக்கு வந்ததோடு மதுபான விடுதிகள், உணவகங்கள் மற்றும் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டிருந்தன.

பாப்பரசர் பிரான்சிஸ் நாட்பட்ட இடுப்பு வலி மீண்டும் ஏற்பட்டதால் ரோமில் புத்தாண்டு நாள் ஆராதனை மற்றும் புத்தாண்டு தின பிரார்த்தனையில் தலைமை வகிக்கவில்லை. பாப்பரசர் பிரான்சிஸ் ‘சியாட்டிகா’ என்ற பிரச்சினையால் முதுகு, கால் வலியால் கடந்த காலத்திலும் அவதியுற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. புத்தாண்டு பிரார்த்தனையில் பங்கேற்காவிடினும், அவர் அப்போஸ்தலிக் அரண்மனை நூலகத்தில் தோன்றி புத்தாண்டு ஆசி வழங்குவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. நெதர்லாந்திலும் ஜனவரி 19 வரை முடக்க நிலை கடைப்பிடிக்கப்படுகிறது. துருக்கியிலும் நான்கு நாள் முடக்க நிலை ஆரம்பிக்கப்பட்டது.

மெட்ரிட் நகரின் பொதுச் சதுக்கத்தில் நடைபெறும் பாரம்பரியக் கொண்டாட்டங்கள் ரத்து செய்யப்பட்டதோடு மக்கள் வீட்டிலிருந்தவாறு புத்தாண்டைக் கொண்டாட ஊக்குவிக்கப்பட்டனர்.

அமெரிக்காவின் பல மாநிலங்கள் மற்றும் நகரங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டிருந்தன. நியூயோர்க்கின் டைம்ஸ் சதுக்கத்தில் வழக்கமான புத்தாண்டு பிறக்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டபோதும் அது பொதுமக்களுக்கு திறக்கப்படவில்லை.

புத்தாண்டு முதலில் பிறந்த நாடுகளில் ஒன்றான அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் வாணவேடிக்கை காட்சிப்படுத்தப்பட்டபோதும் அதனை கண்டு களிப்பதற்கு துறைமுகப் பகுதிக்கு பொதுமக்கள் அனுமதிக்கப்படவில்லை.

சீனத் தலைநகர் பீஜிங்கில் ஆண்டுதோறும் இடம்பெறும் புத்தாண்டு இரவு மின்னொளி நிகழ்ச்சி இம்முறை ரத்துச் செய்யப்பட்டிருந்தது. நாடெங்கும் கொண்டாட்டங்கள் மட்டுப்படுத்தப்பட்டதாக இடம்பெற்றது. எனினும் இந்த நோய்த்தொற்று தோற்றம் பெற்ற வூஹான் நகரில் மக்கள் நகர மையத்தில் ஒன்று திரண்டு பலூன்களை விடுவித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தியாவின் டெல்லி மற்றும் பல நகரங்களிவும் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதோடு பாரிய புத்தாண்டு ஒன்றுகூடல்களுக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டன.

Sat, 01/02/2021 - 06:00


from tkn

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.