கிழக்கில் 12 மணிநேரத்தில் 58 பேருக்கு தொற்று!

- மொத்த தொற்று 1500 ஐக் கடந்தது; 9 மரணங்கள்

கிழக்கு மாகாணத்தில் கடந்த 12 மணிநேரத்தில் 58பேருக்கு கொரோனாத்தொற்று ஏற்பட்டுள்ளது. இந்த 58பேரில் 20பேர் காத்தான்குடியிலும் 08பேர் கல்முனை தெற்கிலும் 07பேர் உகனையிலும் 5பேர் நிந்தவூர் மற்றும் மூதூர் பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை கிழக்கில் கொரோனாத் தொற்றுக்களின் எண்ணிக்கை நேற்றையதினம் (8) வெள்ளிக்கிழமை 1516 ஆகியது. புத்தாண்டில் கிழக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் பரவல் மிகவும் தீவிரமாகி வருகின்றது.நேற்றுமுன்தினம் 12மணிநேரத்தில் அதிகூடிய 60பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கடந்த மார்ச் மாதமிருந்து பேலியகொட மூலமாக இதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் 332பேரும் கல்முனை பிராந்தியத்தில் 915பேரும் திருமலை மாவட்டத்தில் 193பேரும் அம்பாறை பிராந்தியத்தில் 53பேருமாக 1493பேர் தொற்றுக்கிலக்காகியுள்ளனர்.

மேலும் வெளிநாடு, மினுவாங்கொட, கந்தக்காடுகொத்தணி, வெலிசற கடற்படைமுகாம் போன்ற மூலங்களிலிருந்து மீதி 23 தொற்றுக்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

09 மரணங்கள்!

இதுவரை கிழக்கில் சம்மாந்துறை, ஒலுவில், சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, வவுணதீவு, காத்தான்குடி, நாவிதன்வெளி, ஆயைடிவேம்பு இறுதியாக உகணையிலும் மொத்தம் 09 கொரோனா மரணங்கள் சம்பவித்திருக்கின்றன. கல்முனைப்பிராந்தியத்தில் 06பேரும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 02பேரும் அம்பாறைப் பிராந்தியத்தில் ஒருவருமாக இந்த 09 மரணங்கள் சம்பவித்திருக்கின்றன. இத்தரவுகளை கிழக்குமாகாண சுகாதாரத்திணைக்களம் வெளியிட்டுள்ளது.

மட்டக்களப்பில் 332...

மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 332ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் கூடியதாக காத்தான்குடியில் 145 பேரும் கோறளைப்பற்றில் 68 பேரும் களுவாஞ்சிக்குடியில் 31பேரும் மட்டக்களப்பில் 26பேரும் ஏறாவூரில் 18. ஓட்டமாவடியில் 17பேரும் இதுவரை இனங்காணப்பட்டுள்ளனர்.

திருமலையில் 193...

திருமலை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 193ஆக உயர்ந்துள்ளது. மாவட்டத்தில் திருமலை நகரில் 97பேரும் மூதூரில் 47பேரும் கிண்ணியாவில் 18பேரும் கூடுதலாக இனங்காணப்பட்டுள்ளனர். அங்கு ஆறு பாடசாலை மாணவர்களுக்கு தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது.

கிழக்கில் ஆகக்குறைந்த கொரோனாத் தொற்றாளர்கள் 53பேர் அம்பாறை சுகாதாரப்பிரிவிலும் ஆகக்கூடிய தொற்றாளர்கள் 915பேர் கல்முனை சுகாதாரப் பிரிவிலும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் நேற்றுவரை 914பேர் அனுமதிக்கப்பட்டு 768பேர் குணமடைந்து வெளியேறியதால் தற்போது 139பேர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர்.

மேலும் ஈச்சிலம்பற்று சிகிச்சை நிலையத்தில் 70 பேரும் கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 114 பேரும் பதியத்தலாவ சிகிச்சை நிலையத்தில் 5பேரும் பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 50 பேரும் மருதமுனை சிகிச்சை நிலையத்தில் 83 பேரும் புதிதாக ஆரம்பிக்கப்பட்டபெரியகல்லாறு சிகிச்சை நிலையத்தில் 23பேரும் குச்சவெளி சிகிச்சை நிலையத்தில் 49பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

(காரைதீவு குறூப் நிருபர்)

Sat, 01/09/2021 - 14:44


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை