பெருந்தோட்ட தரிசு நிலங்களை தனியாருக்கு வழங்குவதை அனுமதிக்க முடியாது

பெருந்தோட்டங்களில் உள்ள தரிசு நிலங்களை அரசாங்கம் தனியாருக்கு வழங்குவதை எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ள முடியாது என நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கருத்து தெரிவிக்கையில்

மலையக பெருந்தோட்ட பகுதிகளில் இருக்கின்ற தரிசு நிலங்களை பெருந்தோட்ட மலையக இளைஞர்களுக்கு பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தான் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் தெரிவித்திருந்தார்.அவர் அதனை அன்றைய வரவு செலவு திட்டத்திலும் குறிப்பிட்டிருந்தார்.

இதன்படி தொழில் இன்றி இருக்கின்ற எங்களுடைய மலையக இளைஞர் யுவதிகளுக்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்டிருந்ததை நாங்களும் அன்று வரவேற்றோம்.ஆனால் இன்று மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைத்தவுடன் பாதை மாறுகின்றது.

எனவே எந்த காரணம் கொண்டும் எங்களுடைய மக்கள் இருக்கின்ற பெருந்தோட்ட பகுதிகளில் காணப்படுகின்ற தரிசு நிலங்களை வெளியாருக்கோ அல்லது தனியாருக்கோ கொடுப்பதற்கு இடம் கொடுக்க முடியாது.அப்படி வழங்கப்படுமாக இருந்தால் எங்களுடைய மக்களின் இருப்பு கேள்விக்குறியாகிவிடும்.

எதிர்காலத்தில் திட்டமிட்ட அடிப்படையில் நல்ல காணிகளையும் பராமரிக்காமல் தோட்ட நிர்வாகம் கைவிட்டால் அவை தரிசு நிலமாக மாறிவிடும். எனவே அவற்றையும் தனியாருக்கும் வெளியாருக்கும் வழங்கினால் ஒரு கால கட்டத்தில் எங்களுடைய மக்களின் இருப்பு என்னாவாகும். எனவே அந்த காணிகளை எங்களுடைய இளைஞர்களுக்கு வழங்குவதே சிறந்தது.

இன்று மலையக இளைஞர் யுவதிகள் பலரும் இந்த கொரோனா தொற்று காரணமாக தங்களுடைய தொழிலை இழந்துள்ளனர். எனவே அவர்களுக்கு இந்த தரிசு நிலங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதை விடுத்து தனியாருக்கோ அல்லது வெளியாருக்கோ வழங்க முயற்சித்தால் அனைவரும் கட்சி தொழிற்சங்க பேதங்களை மறந்து ஒன்றுபட வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நுவரெலியா தினகரன் நிருபர்

Wed, 12/23/2020 - 14:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை