ரொஹிங்கியர்களை ஆபத்தான தீவுக்கு அனுப்பிய பங்களாதேஷ்

பங்களாதேஷ் நான்கு கடற்படை கப்பல்கள் மூலம் பெரும் எண்ணிக்கையான ரொஹிங்கிய அகதிகளை நேற்று ஆபத்தான தொலைதூர தீவை நோக்கி அழைத்துச் சென்றது.

மியன்மார் வன்முறைகளால் தஞ்சமடைந்து தற்போது பங்களாதேஷ் முகாம்களில் இருக்கும் 1,800 அகதிகள் புதிய வாழ்வை தேடி பஷான் சார் தீவுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக பங்களாதேஷ் அரசு அறிவித்தது. இந்தத் தீவில் ஏற்கனவே இந்த மாத ஆரம்பத்தில் 1,600 அகதிகள் குடியமர்த்தப்பட்டனர்.

பங்களாதேஷ் முகாம்களில் இருக்கும் சுமார் 100,000 ரொஹிங்கிய அகதிகளை இந்தத் தீவில் மறுவாழ்வு அளிக்க பங்களாதேஷ் அரசு எதிர்பார்த்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வங்காள விரிகுடாவில் உருவெடுக்கும் சூறாவளியால் இந்தத் தீவு மோசமாக பாதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த அகதிகள் தமது உடைமைகளுடன் கப்பல்களில் மூன்று மணி நேரம் பயணித்து இந்தத் தீவை அடைந்தனர்.

புதிதாக வருகை தரும் அகதிகளுக்காக தீவில் வீடுகள் அமைக்கப்பட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சர் ஏ.கே. அப்துல் மோமன் தெரிவித்தார். அவை அழகான குடியிருப்புகள் என்றும் அவர் வர்ணித்தார்.

மியன்மாரில் இருந்து தப்பிவந்த ஒரு மில்லியன் ரொஹிங்கிய அகதிகள் பங்களாதேஷில் அடைக்கலம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Wed, 12/30/2020 - 08:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை