இணையத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்காக உரிய வேலைத் திட்டம்

ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய

இணையத்தளங்களை ஒழுங்குபடுத்துவதற்கான அவசியம் காணப்படுவதாகவும், இதற்காக எதிர்வரும் இரண்டு வாரங்களில் உரிய வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகவும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் (21) நடைபெற்ற வெஜகுஜன ஊடகத்துறை அமைச்சின் ஆலோசனைக் குழுவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சமூக ஊடகங்களால் இனங்களுக்கிடையில் குழப்பத்தைத் தூண்டும் வகையில் மேற்கொள்ளப்படும் முயற்சிகள் கட்டுப்படுத்தப்படுவது அவசியமானதென
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி சுரேன் ராகவன் இங்கு தெரிவித்தார். இவ்வாறான செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த சிங்கப்பூரில் புதிய சட்டமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், இதனை ஆராய்ந்து இங்கு புதிய வேலைத்திட்டமொன்றை தயாரிக்க வேண்டுமென்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் சுட்டிக்காட்டினார்.

குடிமக்களின் சுயமரியாதையைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கும் வகையில் பத்திரிகைக் கவுன்சில் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டுவர வேண்டுமென்றும், வெகுஜன ஊடகங்களால் சகல மக்களினதும் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, அமைச்சின் ஆலோசனைக் குழுவில் குறிப்பிட்டார்.

தேவையற்ற விதத்திலான சேறுபூசும் நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட வேண்டும் எனவும், இதற்கு வெகுஜன ஊடகங்களுக்கான ஒழுங்குபடுத்தலொன்று அவசியமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Mon, 11/23/2020 - 15:36


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை