டிரம்ப் நடவடிக்கைகளை திரும்பப் பெறும் அதிரடி உத்தரவுகளுக்கு ஜோ பைடன் தயார்

கோரோனாவை கட்டுப்படுத்த செயலணி அமைப்பு

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப்பை எதிர்த்து வெற்றியீட்டி இருக்கும் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன், கொரோனா தொற்றுக்கு எதிரான நடவடிக்கைக்கு தமது பணிகளில் முன்னுரிமை அளித்திருப்பதாக அவரது உதவியாளர்கள் தெரிவத்துள்ளனர்.

ஆட்சி மாற்றத்தின் முதல் நடவடிக்கையாக, நாட்டில் வைரஸ் சோதனையை அதிகரிக்கவும் அமெரிக்கர்கள் முகக்கவசம் அணிவதற்கு கோரவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக அவர் 12 பேர் கொண்ட கொரோனா தொற்றுக்கு எதிரான செயலணி ஒன்றையும் அறிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இன்னும் தமது தோல்வியை ஒப்புக்கொள்ளாத நிலையில் இன்னும் சில மாநிலங்களில் வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

எனினும் வரும் ஜனவரி மாதம் பதவி ஏற்பதற்கு தேவையான தேர்தல் தொகுதிகளை பைடன் வென்றிருப்பது கடந்த சனிக்கிழமை உறுதியானது.

இந்நிலையில் தாம் பதவி ஏற்றதும் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்தில் கொண்டுவரப்பட்ட நடவடிக்கைகளை திரும்பப் பெறும் பல நிர்வாக உத்தரவுகளை பிறப்பிப்பதற்கு பைடன் எதிர்பார்த்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இதன்படி கடந்த புதன்கிழமை அமெரிக்கா உத்தியோகபூர்வமாக விலகிய காலநிலை மாற்றம் தொடர்பான பாரிஸ் உடன்படிக்கையில் மீண்டும் இணைவதற்கு பைடன் திட்டமிட்டுள்ளார். அதேபோன்று உலக சுகாதார அமைப்பில் இருந்து விலகும் டிரம்பின் முடிவையும் அவர் வாபஸ் பெற எதிர்பார்த்திருப்பதோடு முஸ்லிம் பெரும்பான்மை கொண்ட ஏழு நாடுகள் மீது டிரம்ப் விதித்த பயணத் தடைகளையும் அவர் ரத்துச் செய்ய திட்டமிட்டுள்ளார். சிறுவர்களாக அமெரிக்காவுக்குள் நுழையும் ஆவணம் அற்ற குடியேறிகளுக்கு குடியேற்ற அந்தஸ்தை வழங்கும் ஒபாமா காலத்தின் கொள்கையை மீண்டும் கொண்டுவரவும் பைடன் திட்டமிட்டுள்ளார்.

“நாட்டை பிளவு படுத்துவதற்கு பதில் ஒன்றுபடுத்துவேன்” என்று பைடன் தமது வெற்றி உரையில் உறுதி அளித்திருந்தார். “எமது போட்டியாளர்களை எதிரிகளாக நடத்துவதை நாம் நிறுத்த வேண்டும்” என்று டிரம்ப் ஆதரவாளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

அவரது துணை ஜனாதிபதியான கமலா ஹாரிஸ் ஆட்சி மாற்றத்திற்கான இணைதளம் ஒன்றை ஆரம்பித்திருப்பதோடு நாட்டின் பொருளாதாரம், இனவாதத்தை முறியடிப்பது மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பில் அவதானம் செலுத்துவதாக குறிப்பிட்டார்.

தேர்தல் முடிவுகளின்படி 1990களின் பின் ஒரு தவணைக்கு மாத்திரம் அமெரிக்க ஜனாதிபதி பதவியை வகித்த முதலாமவராக டிரம்ப் மாறியுள்ளார். எனினும் இந்த முடிவை எதிர்த்து பல மாநிலங்களிலும் குடியரசுக் கட்சி ஜனாதிபதி பிரசாரக் குழு வழக்குத் தொடுத்துள்ளது. தேர்தல் மோசடி குறித்து டிரம்ப் தொடர்ந்து கூறிவந்தபோதும் அதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்று தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பைடனின் வெற்றியை எவ்வாறு அணுகுவது என்பது பற்றி மூத்த குடியரசுக் கட்சியினரிடையே பிளவு தொடர்வதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

எனினும் பைடனின் வெற்றிக்கு குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு புஷ் வாழ்த்து தெரிவித்துள்ளார். தேர்தல் அடிப்படையில் நியாயமாக நடத்தப்பட்டது என்பதிலும் அதன் முடிவுகள் தெளிவானது என்பதிலும் அமெரிக்க மக்கள் உறுதியாக இருக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி பதவி ஏற்கவுள்ளார். அதற்கு முன்னரான ஆட்சி மாற்ற காலத்தில் அமைச்சரவையை நியமிப்பது மற்றும் திட்டங்களை வகுப்பதற்கு அவகாசம் வழங்கப்படுகிறது.

Tue, 11/10/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை