வைத்திய பீடங்களுக்கு 371 மேலதிக மாணவர் இணைப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள வைத்தியர்களுக்கான பற்றாக்குறை தொடர்பில் அரசு கவனம் செலுத்தியுள்ளது. அதன் பிரகாரம் இவ்வாண்டு 371 மாணவர்கள் மேலதிகமாக வைத்திய பீடங்களுக்கு இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். பல்கலைக்கழகங்களின் வைத்திய பீடங்களை அபிவிருத்தி செய்வதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.,

பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுக்கு விதிகள் பிரகாரம் வெளியிடப்பட்ட 2055/54 மற்றும் 2155/15 ஆம் இலக்க வர்த்தமானிகள் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறினார்

அவர் மேலும் தெரிவித்தாவது,

சுகாதார அமைச்சரின் இந்த இரண்டு வர்த்தமானி அறிவிப்பிலும் நாட்டுக்கு வைத்தியர்கள் அதிகமாக அவசியம் என்பதை வலியுறுத்தியுள்ளார்.வைத்தியர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் போது வைத்திய கல்வியின் தரத்தையும் அவ்வாறே தொடர்ந்து பேணவும் வேண்டும்.

இம்முறை பல்கலைக்கழகங்களுக்கு 41,500 மாணவர்களை உள்வாங்கியுள்ளோம். கடந்த வருடம் 30ஆயிரம் மாணவர்கள் மாத்திரமே உள்வாங்கப்பட்டிருந்தனர். ஆனால், நாம் மேலதிகமாக 10 ஆயிரம் மாணவர்களை உள்வாங்கியுள்ளோம். அதேபோன்று வைத்திய பீடங்களுக்கு வழமைக்கு மேலதிகமாக 371 மாணவர்களை இணைத்துக் கொண்டுள்ளோம்.

இதன் முழுமையான பிரதிபலன் நாட்டுக்கு கிடைக்க வேண்டுமென்றால் கொழும்புக்கும் கண்டிக்கும் வைத்திய கல்வியை மட்டுப்படுத்தக் கூடாது. கடந்தவாரம் சப்ரகமுவ வைத்திய பீடத்திற்கு சென்றிருந்தேன்.அங்கு நல்ல எதிர்காலம் உள்ளது. சப்ரகமுவ பல்கலையின் வைத்திய பீடத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய பார்க்கின்றோம். அதேபோன்று ஊவா வெல்லஸ்ச பல்கலைக்கழகத்தின் வைத்திய பீடத்தையும் அபிவிருத்தி செய்ய எதிர்பார்க்கின்றோம். அத்துடன், இரத்தினபுரி, பதுளை, தியத்தலாவ உள்ளிட்ட வைத்தியசாலைகளை அபிவிருத்தி செயது அங்கு மாணவர்களுக்கு ஆய்வுகள், பரிசோதனைகள் மற்றும் சத்திர சிகிச்சைகளுக்கான வாய்ப்புகளை உருவாக்க எதிர்பார்க்கிறோம்.

ஊவா வெல்லஸ்ச பல்லைக்கழகத்தில் வைத்திய பீடம் உள்ள நிலையில் பதுளையில் 165 மாணவர்கள் நாட்டின் ஏனைய பல்கலைக்கழகங்களின் வைத்திய பீடங்களுக்கு தெரிவாகியுள்ளனர். பதுளையில் உரிய ஏற்பாடுகள் செய்துக் கொடுத்தால் அவர்கள் நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படாது.

ரஜரட்டை வைத்திய பீடம் உருவாக்கிய பின்னர் ஆய்வுகளுக்காக கொழும்பு பக்லைக்கழத்திற்கு வருபவர்களின் எண்ணிக்கையில் 70 சதவீதம் குறைவடைந்துள்ளது.

ஒரு வருடத்தில் பயிற்சி பெற்ற 700 வைத்தியர்கள் வெளிநாடுகளுக்கு செல்கின்றனர். ஆகவே, அதிகமான வைத்தியர்கள் நாட்டுக்கு அவசியமாகும் என்றார்.

சம்ஸ் பாஹிம், சுப்பிரமணியம் நிஷாந்தன்

Wed, 11/04/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை