பிரான்ஸ் பொருட்கள் மீதான புறக்கணிப்பை நிறுத்துமாறு அரபு நாடுகளிடம் வலியுறுத்து

பிரான்ஸ் பொருட்களை அரபு நாடுகள் புறக்கணிக்கக் கோரிக்கை விடுப்பதை நிறுத்த வேண்டுமென பிரான்ஸ் வலியுறுத்தியுள்ளது.

மதத் தீவிரவாதிகள் தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மெக்ரோன் கூறிய கருத்துகள் அரபு நாடுகள் சிலவற்றில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரான்ஸ் ஆசிரியர் ஒருவரை செச்னிய இளைஞர் படுகொலை செய்த சம்பவத்தைத் தொடர்ந்து அவர் அந்தக் கருத்துகளை வெளியிட்டிருந்தார்.

நபிகள் நாயகத்தைச் சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய கேலிச் சித்திரங்களைக் காட்டி அந்த ஆசிரியர் வகுப்பில் பாடம் நடத்தியதால் மனம் புண்பட்டதாக அந்த இளைஞர் கூறினார்.

"மதவாதிகள் பிரான்ஸ் எதிர்காலத்தைக் கைப்பற்ற விரும்புகின்றனர்" என்று மெக்ரோன் கூறியிருந்தார்.

மதப் பிரிவினைவாதத்தை எதிர்த்துப் போராடும் நோக்கம்கொண்ட, சட்ட நகல் ஒன்றை ஏற்கனவே அவர் தாக்கல் செய்துள்ளார். மதத் தீவிரவாதிகளுக்கு ஒருபோதும் அடிபணியப் போவதில்லை என்று மெக்ரோன் கூறியுள்ளார்.

சர்ச்சைக்கு மூலகாரணமான கேலிச் சித்திரங்களைக் கைவிடப்போவதில்லை என்றும் அவர் சூளுரைத்தார்.

அதை அடுத்து, ஜோர்தான், குவைட், கட்டார் ஆகிய நாடுகளைச் சேர்ந்த சில குழுக்கள் பிரான்ஸ் பொருட்களைப் புறக்கணிக்க அழைப்பு விடுத்தன.

குவைட்டின் சில கடைத்தொகுதிகளில் பிரான்ஸ் நிறுவனங்களின் பொருட்கள் மீட்டுக்கொள்ளப்பட்டுள்ளதாக ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்தது. ஜோர்தானிலும் அதே நிலை ஏற்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவிலும் பிரான்ஸ் பேரங்காடியான கெர்ரபோவைப் புறக்கணிக்குமாறு சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டது.

அத்தகைய செயல்கள் அடிப்படையற்றவை என்றும் உடனடியாக அவை நிறுத்தப்பட வேண்டும் என்றும் பிரான்ஸ் வெளியுறவு அமைச்சு குறிப்பிட்டது.

Tue, 10/27/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை