தேசிய நல்லிணக்கமே தமிழ் மக்களின் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் தீர்வு

இளைய தலைமுறையினரை ஊடகங்கள் பொறுப்புடன் வழிநடத்த வேண்டும்

தினகரன் 'வடக்கின் உதயம்' வெளியீட்டு விழாவில் அமைச்சர் டக்ளஸ்

தேசிய நல்லிணக்கமே தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற அரசியல் மற்றும் அன்றாடப் பிரச்சினை உட்பட்ட அனைத்திற்கும் தீர்வு காண்பதற்கு சிறந்த வழிமுறையாக இருக்குமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அத்துடன் மெய்ப்பொருள் காண்பதே ஊடகங்களின் நோக்காக இருக்கின்ற அதேவேளை அவற்றை நேர்மையாக மக்கள் மத்தியில் கொண்டு செல்கின்ற பணியையும் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்ள வேண்டுமெனவும் அவர் தெரிவித்தார். யாழ். பல்கலைக் கழகத்தின் கைலாசபதி கலையரங்கில் நேற்று (02) நடைபெற்ற தினகரன் நாழிதழின் ‘வடக்கின் உதயம்’ விசேட பதிப்பு வெளியீட்டு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் டக்ளஸ் இதனைத் தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்கும் நோக்கோடு ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்திருந்த போதிலும், காலப் போக்கில் சர்வதேச மற்றும் உள்ளூர் அரசியலில் ஏற்பட்ட மாற்றங்கள், இந்திய - இலங்கை ஒப்பந்தத்திற்கு பின்னரான அரசியல் சூழலும் தேசிய நல்லிணக்கத்தின் ஊடாகவே பிரச்சினைகளுக்கு தீர்த்து கொள்வதற்கான சிறந்த வழிமுறை என்ற யதார்தத்தை புரிய வைத்ததாகவும் தெரிவித்தார்.

எனினும், யதார்த்தத்தைப் புரிந்து கொள்ளாது சில ஊடகங்கள் தவறாக மக்களை வழிநடத்தியிருந்தமையும் எமது மக்கள் எதிர்கொண்ட பல்வேறு துன்பங்களுக்கான காரணங்களில் ஒன்றாகவும் இருந்துள்ளது எனவும் சுட்டிக் காட்டினார்.

இந்நிலையில், எதிர்காலத்திலாவது ஊடகங்கள் தங்களை சுயவிமர்சனம் செய்து கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்த அமைச்சர், மெய்பொருள் காண்பதை இலக்காக கொண்டு ஊடகங்கள் செயற்படுவதுடன், மெய்பொருளை மக்களிடம் எடுத்துச் சென்று, மக்கள் உணர்ந்து கொள்ளும் வகையில் நேர்மையாக செயற்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்.

அத்துடன், சமூக ஊடகங்களின் தாக்கம் பாரம்பரிய ஊடகங்களின் செல்நெறியில் தளம்பல்களை ஏற்படுத்தியுள்ள இன்றைய காலகட்டத்தில், ‘தினகரன்’ போன்ற ஊடகங்கள் காலத்திற்கு தேவையான மாற்றங்களை உள்வாங்குகின்ற அதேவேளை, ஊடக விழுமியங்களைப் பாதுக்கும் வகையில் இளைய தலைமுறையினரை வழிநடத்த வேண்டும் என்பதே விருப்பமாகும் என்று தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தினகரன் நிறுவனத்தினர் காலத்தின் தேவையுணர்ந்து மேற்கொள்கின்ற புதிய முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிப்பதாகவும் கூறினார்.

 

Sat, 10/03/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை