அரசின் புதிய தடையை மீறி தாய்லாந்தில் ஆர்ப்பாட்டம்

தாய்லாந்து ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதிக்கும் அரசின் ஆணையை மீறி ஆயிரக்கணக்கான ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் தலைநகர் பாக்கொக்கில் ஒன்றுதிரண்டனர்.

அமைதியான முறையில் கோசங்கள் எழுப்பி திரண்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் புதிய ஊரடங்கு சட்டத்தால் சில மணி நேரத்தின் பின் கலைந்து சென்றனர். எனினும் தாம் ஆர்ப்பாட்டங்களை தொடர்வதாக அவர்கள் உறுதி அளித்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்ட 20 செயற்பாட்டாளர்களையும் விடுவிக்கும்படி ஆர்ப்பாட்டக்காரர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

மன்னர் மகாவஜ்ஜிரலொங்கோன், பிரதமர் பிரயூத் சான் ஓ சா ஆகியோரைக் குறிவைத்து கடந்த 3 மாதங்களாக நடத்தப்படும் அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் பொருட்டு திணிக்கப்படும் தடைக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டத்தில் தாய்லாந்து மக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

மூன்று விரல்களில் வணக்கம் செலுத்தி தங்களது எதிர்ப்பை ஆர்ப்பாட்டக்காரர்கள் பதிவு செய்தனர்.

பிரயூத் பதவியைத் தக்கவைத்துக்கொள்வதற்காக, கடந்த ஆண்டு அங்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகளை சூழ்ச்சித் திறனுடன் கையாண்டதாகக் குறிப்பிட்டு அவரைப் பதவியிலிருந்து நீக்கும் பொருட்டு இந்த ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன.

ஆனால், தேர்தல் நியாயமான முறையில் நடைபெற்றதாக முன்னாள் இராணுவ சதிப்புரட்சித் தலைவரான பிரயூத் குறிப்பிடுகிறார்.

மேலும், அரசருக்கான அதிகாரங்களைக் குறைத்து புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கடந்த வியாழக்கிழமை அவசர ஆணைகள் பிறப்பிக்கப்பட்ட அரை மணி நேரத்துக்குள், பிரயூத்தின் அலுவலகத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டம் செய்தவர்களை கலவரத் தடுப்பு பொலிஸார் கலைத்தனர். ஆணைகளை ஏற்க மறுத்த 20க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

Sat, 10/17/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை