கொரோனா வைரஸ் தீவிரம் மேலும் மூவர் நேற்று மரணம்

இறந்தோர் தொகை 19 ஆக அதிகரிப்பு; தொற்றாளர் தொகையிலும் திடீர் அதிகரிப்பு

நாட்டில் நேற்றைய தினம் மேலும் மூன்று கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் மரணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. நேற்றுக்காலை ஜா-எல பகுதியைச் சேர்ந்த 41 வயது நபர் ஒருவரும் அதனையடுத்து நேற்றுப் பிற்பகல் கொழும்பு வாழைத் தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞன் மற்றும் கொழும்பு 2, கொம்பனித்தெரு பிரதேசத்தைச் சேர்ந்த 87 வயதுடைய பெண் ஒருவருமே உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

நேற்றுக்காலை மரணமடைந்த ஜா-எல பிரதேசத்தைச் சேர்ந்த நபர் ஐடிஎச் வைத்தியசாலையிலும் ஏனைய இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.

19 வயதுடைய கொழும்பு வாழைத்தோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞன் இயல்பாகவே பிறந்தது முதல் விசேட தேவையுடையவராகக் காணப்பட்டவர் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

மரணமடைந்துள்ள கொழும்பு கொம்பனி வீதியைச் சேர்ந்த 87 வயது பெண்மணி ஏற்கனவே காலில் நோயுடையவராக காணப்பட்டுள்ள நிலையில் அவர் கடந்த ஒரு வார காலமாக நோயுற்று சிகிச்சை பெற்று வந்துள்ளார் என்றும் அமைச்சு தெரிவித்துள்ளது.

அதற்கிணங்க இலங்கையில் நேற்றுவரை 19 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதுடன் ஒரே தினத்தில் 3 கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் உயிரிழந்துள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

அதே வேளை, நாட்டில் இதுவரை 8706 பேர் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளாக இனங்காணப்பட்டுள்ளதுடன் நேற்று மாத்திரம் 293 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நோயாளிகள் 4043 பேர் பூரணமாக குணமடைந்து ஆஸ்பத்திரிகளிலிருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.

அதற்கிணங்க வைரஸ் தொற்று இனங்காணப்பட்டுள்ள 4354பேர் நாட்டின் பல்வேறு வைத்தியசாலைகளிலும் மருத்துவ கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டு வருவதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்தது.அதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை மீறி செயற்பட்டவர்கள் 122 பேர் நேற்றுவரை கைது செய்யப்பட்டுள்ளதுடன் 162 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக வும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப்பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

அத்துடன் நேற்றுவரை 19 பொலிசாருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகியுள்ள நிலையில் அவர்களில் 10 பேர் அதிரடிப் படையைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர் தெரிவித்தார். அவர்களோடு நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்த மேலும் 300 பேர் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

லோரன்ஸ் செல்வநாயகம்

 

Wed, 10/28/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை