லங்கா பிரிமியர் லீக் வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் பாகிஸ்தான் வீரர்கள் பட்டியல் வெளியீடு

இந்த ஆண்டு (2020) முதல்முறையாக நடைபெறவிருக்கும் லங்கா பிரிமியர் லீக் (எல்.பி.எல்.) ரி 20 தொடரின் வீரர்கள் ஏலம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 01ஆம் திகதி நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டதனை அடுத்து, குறித்த வீரர்கள் ஏலத்தில் பங்கெடுக்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

லங்கா பிரிமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் 150 இற்கு கிட்டவான வெளிநாட்டு வீரர்கள் பங்கெடுப்பார்கள் எனக் கூறப்பட்ட நிலையில், தற்போது வெளியிடப்பட்டிருக்கும் பட்டியலின் படி அதில் 24 பேர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் என ”Geo Super” செய்தி நிறுவனம் உறுதி செய்திருக்கின்றது.

லங்கா பிரிமியர் லீக் வீரர்கள் ஏலத்திற்கு நட்சத்திர சகலதுறைவீரரான சஹீட் அப்ரிடியே அதிக அடிப்படை விலையில் வரும் பாகிஸ்தான் வீரராக காணப்படுகின்றார். அப்ரிடியின் அடிப்படை விலை 60,000 அமெரிக்க டொலர்கள் (இலங்கை நாணயப்படி அண்ணளவாக 12 மில்லியன்) என மதிப்பிடப்பட்டிருக்கின்றது.

லங்கா பிரிமியர் லீக் தொடரில் விளையாடும் அணிகளில் ஒன்றான காலி கிளேடியட்டர்ஸ் அணி தமது நட்சத்திரவீரராக சஹீட் அப்ரிடியினை, கடந்த வாரம் அறிவித்திருந்தமை குறப்பிடத்தக்கது.

பாகிஸ்தானிலிருந்து லங்கா பிரிமியர் லீக் தொடருக்காக வரும் ஏனைய வீரர்களில் சொஹைப் மலிக்கின் அடிப்படை விலை 50,000 அமெரிக்க டொலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டிருப்பதோடு, மொஹமட் ஆமிர், மொஹமட் ஹபீஸ் மற்றும் வஹாப் ரியாஸ் ஆகியோரின் அடிப்படை விலையாக 40,000 டொலர்கள் நிர்ணயம் செய்ய ப்பட்டிருக்கின்றது.

இந்த வீரர்கள் தவிர விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரர் சர்பராஸ் அஹ்மட், கம்ரான் அக்மல், சர்ஜீல் கான், மொஹமட் இர்பான், யாசிர் சாஹ், இமாம்-உல்-ஹக், ஹாரிஸ் சொஹைல், மொஹமட் சமி, உமர் குல், மொஹமட் அப்பாஸ், சொஹைல் தன்வீர், ஜூனைத் கான், இமாத் வஸீம், அன்வர் அலி, மொஹமட் நவாஸ். ஹூசைன் தலாட், அசிப் அலி, இப்திகார் அஹ்மட் மற்றும் ரூமான் ரயீஸ் ஆகியோர் லங்கா பிரிமியர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலத்தில் பங்கேற்கும் ஏனைய பாகிஸ்தான் வீரர்களாக காணப்படுகின்றனர்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரங்களான வசீம் அக்ரம் மற்றும் சொஹைப் அக்தார் ஆகியோர் லங்கா பிரிமியர் லீக் தொடரில் பங்கெடுக்கும் அணிகளுக்கு ஆலோசகர்களாக கடமை புரிவதற்கு விருப்பம் தெரிவித்துள்ளாக கூறப்படுகின்றது.

Tue, 09/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை