தலிபான்களுடன் அமைதிப் பேச்சு: மனிதாபிமான யுத்த நிறுத்தத்திற்கு ஆப்கானிஸ்தான் அரசு அழைப்பு

ஆப்கான் அரசாங்கம் மற்றும் தலிபான்களுக்கு இடையே கட்டாரில் அமைதிப் பேச்சுவார்த்தை ஆரம்பமாகி இருக்கும் நிலையில், மனிதாபிமான யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு ஆப்கான் அரசு அழைப்பு விடுத்துள்ளது.

போரில் எந்த வெற்றியாளரும் இல்லை என்று அரச தரப்பு பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவரான அப்துல்லா அப்துல்லா வலிறுத்தியுள்ளார். 

இந்த யுத்த நிறுத்தம் பற்றி தலிபான்கள் எந்த கருத்தும் வெளியிடவில்லை. அதற்கு பதில் ஆப்கான் இஸ்லாமிய சட்டத்தின் கீழ் வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

இரு தரப்பும் உடன்பாடு ஒன்றுக்கு வருவதை ஊக்குவித்திருக்கும் அமெரிக்கா, அவர்கள் வெற்றி பெறுவதை முழு உலகும் எதிர்பார்த்துள்ளது என்றது. ஆப்கானில் நான்கு தசாப்தங்களாக இடம்பெற்று வரும் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் ஆப்கான் மீது அமெரிக்கா படையெடுப்பதற்கு பின்னணியாக இருந்த செப்டெம்பர் 11தாக்குதலின் 19ஆவது ஆண்டு நிறைவு தினத்திற்கு ஒரு நாள் கழித்து கடந்த சனிக்கிழமையே ஆப்கான் அரசு மற்றும் தலிபான்களுக்கு இடையிலான வரலாற்று முக்கியம் வாய்ந்த பேச்சுவார்த்தை ஆரம்பமானது.

ஆப்கான் போர் அமெரிக்க வரலாற்றில் அந்நாடு ஈடுபடும் மிக நீண்ட போராக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தலிபான்கள் மற்றும் ஆப்கான் பிரதிநிதிகளுக்கு இடையே இடம்பெறும் முதலாவது நேரடி பேச்சுவார்த்தையாக இது உள்ளது. இதுவரை காலமும் ஆப்கான் அரசை அமெரிக்காவின் கைப்பாவை என்று கூறிவந்த தலிபான்கள் அரசுடன் பேசுவதை நிராகரித்து வந்தனர்.

எனினும் ஆப்கானில் தொடர்ந்தும் மோதல் இடம்பெற்று வருவதோடு பொதுமக்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர்.

Mon, 09/14/2020 - 12:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை