வெள்ளி கிரகத்தில் உயிர்கள் இருக்க சாத்தியம் கொண்ட வாயு கண்டுபிடிப்பு

வெள்ளிக் கிரகத்தில் மிதக்கும் மேகங்களில் நுண்ணுயிரிகள் இருப்பதற்கு சாத்தியங்கள் உள்ளதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

விளக்க முடியாத வாயு ஒன்று வெள்ளியின் வளிமண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்தே வானியலாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் பாஸ்பீன் வாயு ஒரு மடங்கு பொஸ்பரஸ் மற்றும் மூன்று மடங்கு ஹைட்ரஜன் என்ற அளவில் உருவாகும் வாயுவாகும்.

ஏதாவது உயிரினங்கள் இருந்தால் மட்டுமே இந்த வாயு இருக்கும் என நம்பப்படுகிறது. பூமியில் மனிதர்கள் வாழ்வதால் இங்கும் இதுபோன்ற வாயு காணப்படுகிறது. பொதுவாக பாஸ்பீன் வாயு இரண்டு காரணங்களால் வெளியாகும். ஒன்று, மனிதனின் தொழில்நுட்ப செயல்பாடுகள் காரணமாக வெளியாகும். மற்றொன்று, நுண்ணுயிரிகள் எனப்படும் பாக்டீரியா, பூஞ்சை, ஆல்காக்கள் உள்ளிட்டவைகளால் வெளியாகும்.

ஆனால் உயிரற்ற பொருட்களால் இந்த வாயு வெளியிடப்பட வாய்ப்பில்லை. இது முழுமையாக உறுதியாகும் பட்சத்தில், விண்வெளி ஆராய்ச்சியில் இது மிகப்பெரிய மைல்கல்லாக பார்க்கப்படும் என்கின்றனர்.

வெள்ளி கிரகத்தின் வெப்பநிலை 425 பாகை செல்ஸியஸ் ஆகும். இதனால் தரையில் நுண்ணுயிரிகள் இருக்க வாய்ப்பு இல்லை. ஆனால் மேலே 50 கி.மீ உயரத்தில் காபனீர் ஒட்சைட் நிறைந்த கட்டியான மேக கூட்டங்களில் இந்த நுண்ணுயிரிகள் இருக்க வாய்ப்பு உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

எனினும் வெள்ளி கிரகம் பற்றிய முழுமையான தகவல்கள் இதுவரை கிடைக்காத பட்சத்தில், உயிரினங்கள் வசிப்பதை உறுதி செய்ய முடியாது என சிலர் கூறுகின்றனர். வேறு சில காரணங்களால் கூட இந்த வாயு வெளியாகியிருக்கலாம் என சந்தேகிக்கின்றனர். எனவே இதுபற்றி முழுமையான ஆய்வு மேற்கொள்ள வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.

Wed, 09/16/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை