இஸ்ரேலில் 2ஆவது முறை கொரோனா முடக்க நிலை

கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவ ஆரம்பித்ததை அடுத்து இஸ்ரேலில் மீண்டும் பொது முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை தொடக்கம் மூன்று வாரங்களுக்கு இந்த இரண்டாவது முடக்க நிலை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்தக் கட்டுப்பாட்டினால் பெரும் விலைகொடுக்க வேண்டி இருக்கும் என்று பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார்.

எனினும் நாடு தினந்தோறும் சுமார் 4,000 புதிய நோய்த் தொற்று சம்பவங்களுக்கு முகம்கொடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கியமான யூத விழாக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் பிரதமரை பதவி விலகக் கோரி ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வரும் நிலையிலேயே இந்த முடக்க நிலை அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யோம் கிப்பூர் உட்பட பல விழாக்களை யூத மக்கள் கொண்டாடுவதை தடுப்பதாக இந்த முடக்கலை உள்ளது என்று வீடமைப்பு அமைச்சர் யாகொவ் லிட்ஸ்மான் குறிப்பிட்டுள்ளார். அவரது தீவிர பழமைவாத யூதக் கட்சி ஆளும் கூட்டணி அரசில் இருந்து விலகுவதாகவும் எச்சரித்துள்ளார்.

இஸ்ரேலில் 153,000க்கும் அதிகமான கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்கள் பதிவாகி இருப்பதோடு 1,108 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஒன்பது மில்லியன் மக்கள் தொகையை கொண்ட இஸ்ரேலில் தினந்தோறும் 3,000க்கும் அதிகமான புதிய தொற்று சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன.

Tue, 09/15/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை